மருத்துவ விசா வழங்க வேண்டும் என கோரிய இரண்டு பாகிஸ்தானியர்களுக்கு, இந்தியா உதவி செய்யும் என வெளியுரவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்த உசைர் ஹுமாயுன் என்பவர் தனது மூன்று வயது மகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவ விசா வழங்க இந்தியா உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ், உங்களது மகளுக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவும் வகையில் இந்தியா மருத்து விசா அளிக்கும் என்று தெரிவித்துள்ளார். அதோடு, உங்கள் 3-வயது குழந்தை விரைவில் குணமடைய இறைவனை பிராத்திப்பதாக ட்விட்டர் பக்கத்தில் சுஸ்மா ஸ்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல, பாகிஸ்தானைச் சேர்ந்த நூர்மா ஹபிப் என்ற பெண், அவரது தந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளவதற்காக மருத்துவ விசாவிற்கு விண்ணப்பத்திருக்கிறார். தனது தந்தை மோசமான நிலையில் இருப்பதாகவவும், மருத்துவ விசா வழங்க உதவி செய்ய வேண்டும் எனவும் சுஸ்மா ஸ்வராஜிடம் கோரிக்கை விடுத்தார். இதற்கு ட்விட்டரில் பதிலளித்த சுஸ்மா ஸ்வராஜ், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள உங்களது தந்தை விரைவில் குணமடைந்து, நீண்ட நாள் வாழ விரும்புகிறேன். உங்களது தந்தை இந்தியா வருவதற்கு அனுமதி அளிக்கிறோம் என்று சுஸ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பிரச்சனையாலும், தீவிரவாத அச்சுறுத்தலினாலும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவில் விரிசல் உள்ளது. எனினும், பாகிஸ்தானில் இருந்து மருத்துவ விசாவில் இந்தியாவிற்கு வர விரும்பியவர்களுக்கு, அனுமதியளித்தல் உள்ளிட்டவற்றை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.