/indian-express-tamil/media/media_files/2025/10/06/modis-2025-10-06-21-57-17.jpg)
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது நீதிமன்ற வளாகத்திற்குள் ஒரு வழக்கறிஞர் காலணியை வீச முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த செயலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது ராஜேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் காலணியை வீசி தாக்க முயன்றார். உடனடியாக அவரை பிடித்த உச்ச நீதிமன்றப் பாதுகாப்புப் படையினர் அவரை வெளியேற்றினர். நீதிமன்ற அறையிலிருந்து வெளியேற்றப்படும்போது, சனாதன தர்மத்தின் அவமானத்தை இந்துஸ்தான் சகித்துக்கொள்ளாது என்று சத்தமிட்டார். அவரிடம் இருந்து மீட்கப்பட்ட ஒரு வெள்ளை தாளில், எனது செய்தி ஒவ்வொரு சனாதனிக்கும் ஆனது. சனாதன தர்மத்தின் அவமானத்தை இந்துஸ்தான் சகித்துக்கொள்ளாது என்று எழுதப்பட்டிருந்தது.
கஜுராஹோவில் உள்ள ஒரு கோவிலின் சேதமடைந்த விஷ்ணு சிலையை மீண்டும் கட்டக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்தபோது நீதிபதி கவாய் தெரிவித்த கருத்துக்களால் அந்த வழக்கறிஞர் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் கருத்துக்கள் தொல்லியல் துறையின் (ASI) அதிகார வரம்புக்கு உட்பட்டவை என்ற சூழலிலேயே தெரிவிக்கப்பட்டதாகப் தலைமை நீதிபதி பின்னர் தெளிவுபடுத்திய நீதிபதி, அனைத்து மதங்களையும் மதிப்பதாகவும் தெளிவுபடுத்தினார்.
இதனிடையே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது, காலணி வீசப்பட்ட சம்பவம் குறித்து பலரும் தங்கள் கண்டனங்கள தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, இந்த செயல் "முற்றிலும் கண்டிக்கத்தக்கது" என்று விமர்சித்துள்ளார். இத்தகைய இழிவான நடத்தை நாகரிகமடைந்த சமூகத்தில் இருக்க இடமில்லை என்று கூறிய அவர், நீதித்துறையின் தலைவருக்கு எதிரான இந்தத் தாக்குதலுக்கு தனது கவலையை வெளிப்படுத்தினார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' (X) சமூக ஊடகப் பதிவில், "உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்களிடம் பேசினேன். இன்று நீதிமன்ற வளாகத்தில் அவர் மீது நடந்த தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியுள்ளது. இத்தகைய இழிவான செயல்களுக்கு நமது சமூகத்தில் இடமில்லை. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது என்று பதிவிட்டிருந்தார்.
Spoke to Chief Justice of India, Justice BR Gavai Ji. The attack on him earlier today in the Supreme Court premises has angered every Indian. There is no place for such reprehensible acts in our society. It is utterly condemnable.
— Narendra Modi (@narendramodi) October 6, 2025
I appreciated the calm displayed by Justice…
மேலும், இந்தச் சூழ்நிலையிலும் அமைதியைக் கடைப்பிடித்து, வழக்கு விசாரணையைத் தொடர்ந்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் நிதானத்தை பாராட்டிய பிரதமர் மோடி, "இத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் நீதிபதி பி.ஆர்.கவாய் வெளிப்படுத்திய அமைதியை நான் பாராட்டினேன். இது நீதித்துறையின் மதிப்புகள் மற்றும் நமது அரசியலமைப்பின் உணர்வை வலுப்படுத்துவதில் அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்பை எடுத்துரைக்கிறது," என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் தனது எக்ஸ் தளத்தில் இந்தத் தாக்குதலை கண்டித்து பதிவிட்டுள்ளார். இதில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீதான தாக்குதல் என்பது நமது நீதித்துறையின் மாண்பு மற்றும் நமது அரசியலமைப்பின் உணர்வின் மீதான தாக்குதலாகும். இத்தகைய வெறுப்பு நமது தேசத்தில் இருக்க இடமில்லை, இது கண்டிக்கப்பட வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
The attack on the Chief Justice of India is an assault on the dignity of our judiciary and the spirit of our Constitution.
— Rahul Gandhi (@RahulGandhi) October 6, 2025
Such hatred has no place in our nation and must be condemned.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் தலைமை நீதிபதி மீதான தாக்குதலைக் கண்டித்துள்ளனர்.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (SCOARA) மற்றும் உச்ச நீதிமன்றப் பார் கவுன்சில் ஆகியவை இந்தச் செயல் தலைமை நீதிபதியின் அலுவலகத்தை அவமானப்படுத்துவதாகக் கூறி கண்டனம் தெரிவித்துள்ளன, இந்தியப் பார் கவுன்சில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், டெல்லிப் பார் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்ட அந்த வழக்கறிஞரைத் தொழில் செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.