இந்திய ரயில்வே பயணிகள் ரயில் சேவையை 30 ரயில்களுடன் மே 12-ம் தேதி முதல் படிப்படியாக தொடங்கும் என்று ரயில்வே ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
Advertisment
கோவிட்-19 நோயாளிகள் பராமரிப்பு மையங்களுக்கு 20,000 ரயில்பெட்டிகளை ஒதுக்கிய பின்னர், கிடைக்கக்கூடிய ரயில்பெட்டிகளின் அடிப்படையில் புதிய வழித்தடங்களில் மேலும் சிறப்பு சேவைகளுடன் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. மேலும், தினசரி 300 ரயில்களை “ஷ்ராமிக் ஸ்பெஷல்” ரயில்களாக இயக்க ஏதுவாக போதுமான எண்ணிக்கையில் ரயில்பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.
புது தில்லியில் இருந்து திப்ருகார், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புவனேஸ்வர், செகந்திராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மட்கான், மும்பை சென்ட்ரல், அகமதாபாத் மற்றும் ஜம்மு தாவி ஆகிய இடங்களுக்கு பயணிகள் சென்றுவர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில் சேவை விவரங்களை இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பயணிகள் ரயில்களில் பயணம் செய்வதற்கான முன்பதிவு மே 11 ஆம் தேதி மாலை 4 மணிக்கு தொடங்கும் என்றும் ஐஆர்சிடிசி இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்யப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ள்ளது. மேலும், ரயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்கள் மூடப்பட்டிருக்கும், கவுண்ட்டர்களில் டிக்கெட்டுகள், பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் உட்பட வழங்கப்படாது என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
பயணம் செய்வதற்கான உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் வைத்திருக்கும் பயணிகள் மட்டுமே ரயில் நிலையங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் முகக்கவசம் அணிந்து புறப்படும்போது தெர்மல் ஸ்கிரீனிங் பரிசோதனைக்கு கட்டாயமாக உட்படுத்தப்படுவார்கள். மேலும், இருமல், தும்மல், காய்ச்சல் அறிகுறியற்ற பயணிகள் மட்டுமே ரயிலில் ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்று ரயில்வே அறிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"