பல பிரபஞ்சங்கள் இணைந்த இந்த பெரும் தொகுப்பை பூனேவிலுள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பி.எச்.டி. மாணவர், சிஷிஷ் சங்யாயன், பூனே விண்வெளி ஆராய்ச்சி பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவனான பிரதிக், கேரளாவின் நியூமேன் கல்லூரி மாணவர் ஜோ ஜேக்கப், ஜாம்ஷெட்பூரில் உள்ள தேசிய தொழில்நுட்ப மையத்தை சேர்ந்த பிரகாஷ் சர்க்கார் ஆகியோர் இணைந்து கண்டறிந்தனர்.
பிரபஞ்சத்தின் பெரும் தொகுப்பானது 20 மில்லியன் பில்லியன் சூரியனைவிட அதிக நிறைகொண்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள பிரபஞ்ச தொகுப்புகளிலேயே தற்போது கண்டுபிடிக்கப்பட்டது தான் பெரியது என அறியப்படுகிறது.
இந்த தொகுப்பு பூமியிலிருந்து 4 ஆயிரம் மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் அமைந்துள்ளது. பிரபஞ்சம் தோன்றிய பின்னர் 10 பில்லியன் ஆண்டுகளுக்குள் இந்த பிரபஞ்ச தொகுப்பு தோன்றியதாகவும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரபஞ்ச தொகுப்பில் ஆயிரம் முதல் பத்தாயிரம் வரை கேலக்ஸிக்கள் இருக்கும் எனவும், அவை 40 முதல் 43 வரை கேலக்ஸி தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன எனவும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தொகுப்பிற்கு ‘சரஸ்வதி’ என பெயரிடப்பட்டுள்ளது மத ரீதியில் வைக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துவரும் நிலையில் அதுகுறித்தும் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்தனர். சரஸ்வதி நதி பல கிளை நதி தொகுப்பு. அதனால், பல கேலக்ஸிக்களின் தொகுப்பாக உள்ள இந்த பிரபஞ்சத்தின் பெரும் தொகுப்பிற்கு ‘சரஸ்வதி’ என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது.