மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூடுதலாக கவனித்து வந்த பாதுகாப்புத்துறையின் அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் அமைச்சரவை மூன்றாவது முறையாக இன்று மாற்றியமைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற விழாவில், பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், வர்த்தகத்துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
அதேபோல், உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த சிவ் பிரதாப் சுக்லா, பீகாரை சேர்ந்த அஸ்வினி குமார் சௌபே, மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த வீரேந்திர குமார், பீகாரை சேர்ந்த ராஜ்குமார் சிங், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆனந்த் குமார் ஹெக்டே, முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரி ஹர்தீப் சிங் பூரி, ராஜஸ்தானை சேர்ந்த கஜேந்திர சிங் ஷெகாவத், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான கேரளாவை சேர்ந்த அல்போன்ஸ் கன்னன்தானம், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சத்ய பால் சிங் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் பொறுப்பேற்றதும் அவரிடம் இருந்த பாதுகாப்புத் துறையை நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூடுதலாக கவனித்து வந்தார். தற்போது அந்த துறை நிர்மலா சீதாராமனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் இந்திராகாந்திக்கு பின் பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்கும் இரண்டாவது பெண் நிர்மலா சீதாராமன் என்பது கவனிக்கத்தக்கது.
அதேபோல், தமிழகத்தை சேர்ந்த மற்றொரு அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நிதித்துறையின் இணையமைச்சர் பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் இணையமைச்சர் பொறுப்பை கவனித்து வருகிறார். மத்திய நிதி மற்றும் கார்பரேட் விவகாரங்கள் துறையை அருண் ஜெட்லி கவனிப்பார்.
அண்மையில் நடைபெற்ற ரயில் விபத்துக்களுக்கு பொறுப்பேற்று அத்துறையின் அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபு ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தார். ஆனால், அவரை பொறுத்திருக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்த நிலையில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை சுரேஷ் பிரபுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மின்துறை அமைச்சராக இருந்த பியூஷ் கோயலுக்கு ரயில்வேத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூடுதலாக திறன் மேம்பாட்டுத்துறையை கவனிக்கவுள்ளார். உமா பாரதிக்கு குடிநீர் மற்றும் சுகாதாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவரிடம் இருந்த நீர்வளத்துறை, ஆறுகள் மேம்பாடு கங்கா புத்துணர்வுத்துறை நிதின் கட்கரிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு கூடுதலாக சுரங்கத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. விஜய் கோயலுக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் புள்ளிவிவரங்கள், திட்டம் நடைமுறைப்படுத்துதல் துறைகளின் இணையமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக பொறுபேற்றுள்ள ஹர்தீப் சிங் பூரிக்கு நகர அபிவிருத்தித் துறையின் இணையமைச்சர், அஸ்வினி குமார் சௌபேவுக்கு சுகாதார மற்றும் குடும்ப நலன் இணையமைச்சர், ஆனந்த் குமார் ஹெக்டேவுக்கு திறன் மேம்பாட்டுத்துறையின் இணையமைச்சர், அல்போன்ஸ் கன்னன்தானதிற்கு சுற்றுலாத்துறை இணையமைச்சர் (தனி பொறுப்பு), மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் இணையமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.சிங்கிற்கு மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையின் இணையமைச்சர் (தனி பொறுப்பு), ராஜவர்தன் ரத்தோருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் இணையமைச்சர் (தனி பொறுப்பு) பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.