இந்தியாவில் தமிழகம் உள்பட நான்கு மாநிலங்களில் ஜப்பானிய தொழில் நகரங்கள் அமைக்கப்படும் என இந்திய - ஜப்பான் இடையேயான ஆண்டு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்தார்.
ஜப்பான் பிரதமர் சின்சோ அபே இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன், அவரது மனைவி மற்றும் அந்நாட்டு அதிகாரிகள் குழு உள்ளிட்டவர்களும் வந்துள்ளனர். நேற்று முன்தினம் குஜராத் மாநிலம் ஆமதாபாத் வந்தடைந்த அபே-வை பிரதமர் மோடி நெறி சென்று வரவேற்றார். பின்னர், இருவரும் சபர்மதி ஆசிரமத்திற்கு திறந்த வாகனத்தில் சாலை மார்க்கமாக சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து, பிரசித்தி பெற்ற ஆமதாபாத் சிதி சையத் மசூதிக்கும் அவர்கள் சென்றனர்.
அதன்பின்னர், குஜராத் மாநிலம் ஆமதாபாத் - மகாராஷ்டிர மாநிலம் மும்பை இடையேயான புல்லட் ரயில் திட்டதிற்கு இருவரும் இணைந்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர். மொத்தம் 5 ஆண்டுகளில் இத்திட்டத்தை முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரூ.1,10,000 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்திற்காக, ஜப்பானிடம் இருந்து 0.1 சதவீத வட்டியில் ரூ.88,000 கோடி கடனுதவியை இந்தியா பெறுகிறது. மொத்தம் 508 கி.மீ., துாரத்துக்கு இயக்கப்பட உள்ள இந்த புல்லட் ரயில், மணிக்கு, 320 கி.மீ., வேகத்தில் செல்லும். இந்த வேகம் மணிக்கு, 350 கி.மீ., வரை பின்வரும் நாட்களில் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழாவில் பேசிய பிரதமர் மோடி, புல்லட் ரயில் திட்டம், குஜராத், மகாராஷ்டிரா மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியா வளர்ச்சி பெற உதவும். இந்தியாவின் புல்லட் ரயில் திட்டத்தில் ஜப்பான் பிரதமர் தனிப்பட்ட ஆர்வம் கொண்டிருந்தார். உற்பத்தி துறையின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டே இத் திட்டம் துவக்கப்பட்டது என்றார்.
அதேபோல், விழாவில் பேசிய ஜப்பான் பிரதமர் அபே, இந்தியா - ஜப்பான் நட்புறவின் அடையாளம் புல்லட் ரயில். இந்தியாவும், ஜப்பானும் இணைந்து செயல்பட்டால் முடியாதது ஒன்றுமில்லை. பிரதமர் மோடி சிறந்த தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைவர் என புகழாரம் சூடினார்.
இதனைத் தொடர்ந்து, இந்தியா - ஜப்பான் இடையேயான 12-வது ஆண்டு உச்சி மாநாடு காந்திநகரில் நடைபெற்றது. அதில், இரு தரப்பு விவகாரங்கள், பிராந்திய பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விஷங்கள் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.
இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாடு, ஆந்திரா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களில் ஜப்பானிய தொழில் நகரங்கள் அமைக்கப்படும் என்றார். மேலும், இந்த மாநாட்டில் இரு தரப்பிலும் 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானதை தொடர்ந்து, இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மோடி, இந்திய - ஜப்பான் உறவை இந்த ஒப்பந்தங்கள் வலுப்படுத்தும் என்றார். மேலும், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களை சோதித்து வருவதற்கும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவி சோதிப்பதற்கும் இரு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.