என்னதான் பஞ்சுமெத்தையில் உறங்கினாலும், இந்த ஐடி ஊழியர்களுக்கு தூக்கம் வருமா என்பது சந்தேகம் தான்.
ஹெச் 1 பி விசா எண்ணிக்கையை அமெரிக்கா குறைத்ததால், இந்திய ஐடி நிறுவனங்கள் மூலம் அமெரிக்கா சென்று வேலை பார்க்கும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் உள்ள இன்ஃபோஸில் நிறுவனம், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10 ஆயிரம் அமெரிக்கர்களை புதிதாக வேலைக்கு அமர்த்துகிறது.
இந்திய ஐடி நிறுவனங்களின் 60 சதவீத வாடிக்கையாளர்கள், வட அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். இதைத் தாண்டி ஐரோப்பிய நாடுகளில் 20 சதவீத வாடிக்கையாளர்களும் மற்ற நாடுகளில் 20 சதவீத வாடிக்கையாளர்களும் உள்ளனர். சுமார் 150 பில்லியன் டாலர் அளவில் டர்ன்ஓவர் செய்யும் இந்திய ஐடி நிறுவனங்கள், வெளிநாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக, இங்கிருந்து ஐடி ஊழியர்களை அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளன. இந்திய ஐடி ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில், இந்திய ஐடி துறைக்கு சரிவை உண்டாக்கும் வகையில், ஹெச் 1 பி விசா எண்ணிக்கையை அமெரிக்க அரசு குறைத்தள்ளதால் , இந்திய ஐடி நிபுணர்கள் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்று பணிபுரியும் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் கூட, இந்திய ஐடி ஊழியர்களுக்கு ஹெச் 1 பி விசா தரும் எண்ணிக்கையை குறைக்க தொடங்கிவிட்டது. இதன் எதிரொலியாக, விப்ரோ போன்ற பெரிய ஐடி நிறுவனங்கள் கூட, சுமார் 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
இந்த பிரச்னையை சமாளிக்க, இன்ஃபோஸிஸ் வேறு சில வழிகளை பின்பற்ற முடிவு செய்திருக்கிறது. வழக்கமாக, க்ளையண்ட் சர்வீஸ் செய்ய இந்தியர்கள் அமெரிக்கா செல்லும் முறையைத் தவிர்க்கும் முடிவுதான் அது. அதற்கு பதிலாக, அந்த வேலையை செய்ய அமெரிக்கா ஐடி நிபுணர்களையே பணிக்கு எடுக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து, மொத்தமாக 10 ஆயிரம் அமெரிக்கப் பணியாளர்களை இன்ஃபோஸிஸ் நிறுவனம் பணிக்கு அமர்த்த உள்ளது. இவர்களையே financial services, manufacturing, healthcare, retail and energy போன்ற பிரிவுகளிலும் பணியாற்ற வைக்க திட்டமிட்டுள்ளது. மேலும், மூன்று நகரங்களில் விரைவில் தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இரு மாதங்களுக்கு முன்னர் 'இன்ஃபோஸிஸ், டாடா கன்சல்டன்சி போன்ற நிறுவனங்கள், ஹெச் 1 பி விசா பெறுவதில் முறைக்கேடுகளில் ஈடுபடுகின்றன என அமெரிக்கா குற்றம்சாட்டியது. மேலும், லாட்டரி முறையில் அதிக ஹெச் 1 பி விசாக்களைப் பெறும் வகையில் அதிக விண்ணப்பங்களை அனுப்புகிறது எனவும் அமெரிக்கா புகார் கூறியது. ஒவ்வொரு ஆண்டும் 85 ஆயிரம் ஹெச் 1 பி விசாக்களை இந்தியாவிற்கு ஒதுக்குகிறது அமெரிக்கா. இதில் 60 ஆயிரம் விசாக்கள் ஐடி ஊழியர்களுக்கும், அமெரிக்காவில் உயர் கல்வி பயில்பவர்களுக்கு 20 ஆயிரம் விசாக்கள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை, இன்ஃபோஸிஸ், டாடா நிறுவனங்கள் சேர்ந்து 7,504 ஹெச் 1 பி விசாக்களை பெற்றிருக்கின்றன. இது மொத்த விசாக்களில் 8.8 சதவீதம் மட்டுமே ஆகும்.
இதுகுறித்து இன்ஃபோஸிஸ் தலைமை செயல் அதிகாரி விஷால் சிக்கா கூறுகையில், "அமெரிக்காவைச் சேர்ந்தவர்களுக்கு பணி வழங்க, இண்டியானாவில் ஆகஸ்ட் மாதம் முதல் தொழில்நுட்ப மையம் செய்லபட உள்ளது. தகவல் தொழில்நுட்பத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். சர்வதேச வல்லுனர்களுடன் , மண்ணின் மைந்தர்களும் இணைந்து பணியாற்றுவது வர்த்தக ரீதியில் ஆரோக்கியமான விஷயம்" என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.