ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் சேவைக்கட்டணம் என்பதனை வாடிக்கையாளரின் விருப்பத்தின் பேரில் விட வேண்டும் என மத்திய நுகர்வோர் விவகார துறை அமைச்சகம் கடந்த ஏப்ரல் தெரிவித்திருந்தது. இருப்பினும், சேவைக் கட்டணமானது வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூல் செய்யப்படுவது நின்றபடில்லை. சில ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் 5முதல் 20 சதவீதம் 'சர்வீஸ் சார்ஜ்' என்ற சேவை கட்டணத்தையும் கட்டாயமாக வசூலித்து வருகின்றனர். எனவே வருமான வரி கணக்கு ஆய்வின் போது, சேவை கட்டணத்தை வருமானமாக கருதும்படி, மத்திய நேரடி வரி வாரியத்திற்கு மத்திய நுகர்வோர் விவகார துறை அமைச்சகம் ஆலோசனை வழங்கியிருக்கிறது.
வாடிக்கையாளர்களிடம் இருந்து சேவை கட்டணம் வசூல் செய்யப்படுவது என்பது, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986-க்கு எதிரானது. எனினும், வாடிக்கையாளர்கள் பலர் இது குறித்து அறிந்திருந்த போதிலும், ஹோட்டல்களில் இது போன்ற சேவை கட்டணம் கேட்கும் போது உதவியின்றி தவிக்கும் நிலைக்கு ஆளாகிவருகின்றனர். இது தொடர்பாக தேசிய நுகர்வோர் உதவி மையத்திற்கு( National Consumer Helpline)பல்வேறு புகார்கள் தொடர்ந்து சென்ற வண்ணம் உள்ளன. இதற்கு தீர்வுகாணும் வகையில் மத்திய நுகர்வோர் விவகார துறை இந்த ஆலோசனையை வழங்கியிருக்கிறது.
இந்த நிலையில், ஹோட்டல்களில் வசூல் செய்யப்படும் சேவை கட்டணத்தை, வருமான வரி கணக்கு ஆய்வின்போது, அதனை வருமானமாக கருதவேண்டும் என மத்திய நேரடி வரி வாரியத்திற்கு மத்திய நுகர்வோர் விவகார துறை அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது. மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் ட்விட்டர் மூலம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், எம்.ஆர்.பி விலைக்கு அதிகமாக கட்டணம் வசூல் செய்யப்படுவதை தவிர்க்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்பு செய்யுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மத்திய நுகர்வோர் விவகாரதுறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.