இஸ்ரோ 36 ஒன்வெப் செயற்கைக்கோள்களை எல்.வி.எம்3 ராக்கெட் மூலம் இன்று (அக்டோபர் 23) அதிகாலை 1.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்திலிருந்து ராக்கெட் ஏவப்பட்டது. செயற்கைக்கோள்கள் அதன் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது என இஸ்ரோ அறிவித்தது.
எல்.வி.எம்3 (Launch Vehicle Mark III (LVM3)) இஸ்ரோவின் அதிக எடைக் கொண்ட ராக்கெட் (Heaviest launch vehicle) ஆகும். முன்பு இந்த ராக்கெட் ஜி.எல்.எஸ்.வி எம்.கே3 (Geosynchronous launch vehicle Mark III (GLSV-MK III)) என்று அழைக்கப்பட்டது.
ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட 37 நிமிடங்களில், நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்தது. இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் கூறுகையில், எதிர்பார்த்தபடி 16 செயற்கைக்கோள்கள் ராக்கெட்டிலிருந்து பாதுகாப்பாக பிரிந்து சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. மீதமுள்ள 20 செயற்கைக்கோள்களும் பிரிக்கப்படும். ராக்கெட் பூமியின் மறுபுறத்தில் இருப்பதால் தற்போது எங்களால் அதைப் பார்க்க முடியவில்லை. சிறிது நேரம் கழித்து தரவுகள் கிடைக்கும். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். இஸ்ரோ கொண்டாட்டத்தை சற்று முன்னதாகவே தொடங்கியுள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து , அடுத்த திட்டத்தில் இதே ராக்கெட் மூலம் மேலும் 36 ஒன்வெப் செயற்கைக்கோள்கள் ஏவப்பட உள்ளன என்று தெரிவித்தார்.
எல்.வி.எம்3 முதல் முறையாக அதிக செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது. இந்த செயற்கைக்கோள்கள் பூமியின் குறைந்த சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல், அதிக எடையான 6 டன் பேலோடை விண்வெளிக்கு சுமந்து சென்றதும் இதுவே முதல் முறை. 36 செயற்கைக்கோள்களின் மொத்த எடை சுமார் 5.8 டன் ஆகும். இவ்வளவு எடைகளை சுமந்து சென்றது இதுவே முதல்முறையாகும். எல்.வி.எம்3 ராக்கெட் 8 டன் எடை வரை கொண்டு செல்லும் திறன் கொண்டது. அதேவேளையில் பி.எஸ்.எல்.வி மிகவும் இலகுவான ராக்கெட் 1.4 முதல் 1.75 டன் எடை வரை சுமந்து செல்லும்.
சவாலான திட்டம்
இங்கிலாந்தைச் சேர்ந்த நெட்வொர்க் அக்சஸ் அசோசியேட்டட் லிமிடெட், இந்தியாவின் பாரதி இணைந்து உலகளாவிய இணைப்பை வழங்க 588 செயற்கைக்கோளை உருவாக்கி விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
இதில், அடுத்த ஆண்டு மேலும் 36 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பபட உள்ளன. ஏற்கனவே 464 செயற்கைகோள்கள் அனுப்பபட்டுள்ளன.
இந்த திட்டம் மிகவும் சவாலான திட்டம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர். ஏனெனில், அதிகமான செயற்கைகோள்கள் ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் நிலைநிறுத்தப்படும் போது துல்லியமாக நிலைநிறுத்தப் பட வேண்டும். செயற்கைக்கோள்கள் ஒன்றோடு ஒன்று மோதாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். செயற்கைக்கோள்கள் அதன் சுற்றுப்பாதையில் சுற்றி வரும் போதும் எதிர்காலத்திலும் மோதாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதன்படி, இஸ்ரோ செயற்கைக்கோள்களை 600 கி.மீ சுற்றுப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.