ஐ.டி. ரெய்டில் ரூ.10 கோடி பறிமுதல்: இந்தியாவின் 2-வது பணக்கார அமைச்சருக்கு சிக்கல்

கர்நாடக மாநில எரிசக்தி துறை அமைச்சர் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட வருமான வரித்துறை சோதனையில். 7.5 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

கர்நாடக மாநில எரிசக்தி துறை அமைச்சர் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட வருமான வரித்துறை சோதனையில். 7.5 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

குஜராத் மாநிலத்தில் காலியாக உள்ள மூன்று மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு வரும் 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இதனால், காங்கிரஸ் உறுப்பினர்களை பாஜக தம் வசம் இழுப்பதாக குற்றம்சாட்டி, கடந்த ஜூலை 30-ஆம் தேதி முதல், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 44 பேர் பெங்களூரில் உள்ள ஈகிள்டன் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஊடகம் முன் தோன்றி, தாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும், அவர்களை பிரிக்க முடியாது எனவும் கூறினர். இந்நிலையில், குஜராத் மாநில பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் திங்கள் கிழமை பெங்களூருக்கு சென்றனர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒற்றுமையைக் குலைக்கவே அவர்கள் வந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், புதன் கிழமை காலை 7 மணியளவில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சொகுசு விடுதியில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரிடமும் வருமான வரித்துறையினர் விசாரணையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றிருக்கும் கர்நாடக மாநில எரிசக்தி துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

மொத்தமாக, 60 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதாகவும், அதில் அமைச்சர் சிவக்குமார் வீடுகளிலிருந்து 10 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்தனர். அந்த 10 கோடி ரூபாயில் சுமார் 7.5 கோடி ரூபாய் அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் டெல்லி வீட்டிலிருந்தும், 2.5 கோடி ரூபாய் பெங்களூரு வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்தியாவிலேயே இரண்டாவது பணக்கார அமைச்சர் டி.கே.சிவக்குமார். இவருடைய சொத்து மதிப்பு 251 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சிகளை சி.பி.ஐ. மூலம் பாஜக பழிவாங்கவே இந்த சோதனை நடத்தப்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இதற்கு பதிலளித்த அருண் ஜெட்லி, “குஜராத் எம்.எல்.ஏக்களுக்கு எதிராக இந்த வருமான வரித்துறை சோதனை நடத்தப்படவில்லை. கர்நாடக அமைச்சர் வீட்டில் தான் நடத்தப்பட்டது”, என கூறினார்.

×Close
×Close