சிஏஏ எதிர்ப்பு அமைதி பேரணியில் ஜாமியா மாணவர் மீது துப்பாக்கிச் சூடு; பரபரப்பு வீடியோ
புது டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்துக்கு வெளியே வியாழக்கிழமை குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது, ஒரு நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒரு மாணவர் காயம் அடைந்தார்.
புது டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்துக்கு வெளியே வியாழக்கிழமை குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது, ஒரு நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒரு மாணவர் காயம் அடைந்தார். கையில் துப்பாக்கி குண்டுகளால் காயம் அடைந்த மாணவர் அருகிலுள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Advertisment
இந்த வீடியோவில், துப்பாக்கி வைத்திருக்கும் அந்த நபர், “யே லோ ஆசாதி… இந்துஸ்தான் ஜிந்தாபாத்… டெல்லி போலீஸ் ஜிந்தாபாத்” என்று சொல்வதைக் கேட்க முடிகிறது. அந்த நபர் அடையாளம் காணப்பட்டு பிடிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படும் நபர் 18 வயது நிரம்பாதவர் என்பதால் அவருடைய பெயர் வெளியிடப்படவில்லை.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மாணவர் ஜம்மு-காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர். அவர் மாஸ் கம்யூனிகேஷன் படித்து வரும் சதாப் நஜர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மகாத்மா காந்தியின் 72-வது ஆண்டு நினைவுநாள் நிறைவை முன்னிட்டு ஜாமியா மில்லிய ஐஸ்லாமியாவின் மாணவர்கள் ராஜ்காட் பகுதியில் அணிவகுப்பு நடத்தவிருந்தனர்.
பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூட்டத்தில் இருந்தவர்களை நோக்கி எதிர்த்து போராடுபவர்களை துப்பாக்கியால் சுடுங்கள் என்று கோஷமிட ஊக்குவித்த சில நாட்களுக்குப் பின்னர் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
திங்கள்கிழமை நடைபெற்ற ஒரு தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அனுராக் தாகூர், தேச துரோகிகளை என்ன செய்ய வேண்டும்? அவர்களை சுட வேண்டும்” என்று பேசினார். இதையடுத்து, தேர்தல் ஆணையம் அவர் 72 மணி நேரம் தேர்தலில் பிரசாரம் செய்ய தடைவிதித்தது.
டிசம்பர் 15-ம் தேதி, டெல்லி காவல்துறையினர் ஜாமியா வளாகத்த்துக்குள் நுழைந்து தாக்கியதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் காயமடைந்தனர். அப்போது, குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியதையடுத்து நான்கு டி.டி.சி பேருந்துகள், 100 தனியார் வாகனங்கள் மற்றும் 10 போலீஸ் பைக்குகள் சேதமடைந்தன.