இந்தியாவிலேயே முதன்முறையாக கேரளாவில் தொழுகைக்கு தலைமை தாங்கிய பெண் இமாம்

திருவனந்தபுரத்தை சேர்ந்த ஜமிதா என்ற பெண், தொழுகைக்கு இமாமாக இருந்து தலைமை தாங்கி நடத்தினார். பெண் ஒருவர் தொழுகைக்கு தலைமை தாங்குவது இதுதான் முதல்முறை.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஜமிதா என்ற பெண், தொழுகைக்கு இமாமாக இருந்து தலைமை தாங்கி நடத்தினார். பெண் ஒருவர் தொழுகைக்கு தலைமை தாங்கி நடத்துவது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை என கருதப்படுகிறது.

திருவனந்தபுரத்தை சேர்ந்த ஜமிதா (34) என்பவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாம் மதத்தில் நிலவிவரும் பாலின பாகுபாடு குறித்து கேள்வி எழுப்பினார். இதனால், அந்த மதத்தை சார்ந்த பெரியவர்களின் எதிர்ப்புக்கு ஜமிதா ஆளானார். மேலும், அவருக்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், தன் பாதுகாப்பு கருதி ஜமிதா திருவனந்தபுரத்திலிருந்து வெளியேறி வேறு பகுதியில் தங்கும் நிலைமைக்கு ஆளானார்.

இந்நிலையில், கடந்த 26-ஆம் தேதி குடியரசு தினம் அன்று, மலப்புரம் மாவட்டத்தில் குரான் சுன்னத் என்ற அமைப்பினர் நடத்திய வெள்ளிக்கிழமை தொழுகையை ஜமிதா தலைமை தாங்கி நடத்தினர். இந்த தொழுகையில், ஆண்கள் உட்பட 50 பேர் கலந்துகொண்டனர்.

பெண் ஒருவர் தொழுகையை தலைமை தாங்கி நடத்துவது இதுவே முதல்முறை என கருதப்படும் நிலையில், இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது.

இதுகுறித்து பேசிய ஜமிதா, “முஸ்லிம் மதத்தில் நிலவிவரும் ஆணாதிக்க மனோபாவம் குறித்து கேள்வியெழுப்ப விரும்பினேன். வழக்கமான மத நடைமுறைகள் ஆணாதிக்க சிந்தனையுடன் உள்ளன. அவற்றை மத குருமார்களே திணிக்கின்றனர். ஆனால், முஸ்லிம் மதம் எல்லாவற்றிலும் பெண்களுக்கு சம உரிமைகளை முன்மொழிகிறது. பெண்கள் தலைமை தாங்கி நடத்தும் தொழுகைகளை குரான் சுன்னத் அமைப்பு மாநிலம் முழுவதும் நடத்தும்”, என கூறினார்.

மேலும், தனக்கு வரும் எதிர்ப்புகள் குறித்து பேசிய ஜமிதா, “தொழுகைக்கு தலைமை தாங்கியதற்காக எனக்கு எந்தவித மிரட்டலும் வரவில்லை. சமூக வலைத்தளங்களில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக எனக்கு தெரியவந்தது.”, என கூறினார்.

கேரள மாநிலம் பலவற்றிலும் முன்னோடியாக கருதப்படும் நிலையில், இதன்மூலம் மேலும் ஒரு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close