மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கொலை: பசு பாதுகாவலர்கள், பஜரங் தள் அமைப்பினருக்கு தொடர்பு

ஜார்க்கண்டில் வாகனத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பசு பாதுகாவலர்கள் சமிதி மற்றும் பஜரங் தள் அமைப்பினருக்கு தொடர்ப்பிருப்பது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாடு, எருது உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்ததையடுத்து, மாட்டிறைச்சி வைத்திருப்பவர்கள் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சில கும்பலால் கொலை செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களை கொலை செய்வதை காந்தி கூட ஏற்றுக்கொள்ள மாட்டார் என கடந்த வியாழக்கிழமை பிரதமர் மோடி கூறினார்.

ஆனால், அன்றைய தினமே ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக அலிமுதின் அன்சாரி (45) என்பவர் சுமார் 10 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக ஒருவரை வெள்ளிக்கிழமை காவல் துறையினர் கைது செய்தனர். ஆனால், அவரது விவரங்களை காவல் துறையினர் வெளியிடவில்லை.

இதனிடையே, அன்சாரியை கொலை செய்த கும்பலில் இருந்தவர்களில் பசு பாதுகாவலர்கள் மற்றும் பஜரங் தள் அமைப்பை சேர்ந்தவர்களும் இருந்தனர் என அன்சாரியின் குடும்பத்தினர்ர காவல் துறையினர் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த செவ்வாய் கிழமையும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வீட்டின் முன் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக ஒருவர் தாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய சம்பவங்கள் தொடரும் நிலையில், மாடுகள் இறைச்சிக்காக கொல்லப்படுதல் மற்றும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதை காவல் துறையினர் தடுக்க வேண்டும் எனவும், மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அம்மாநில முதலமைச்சர் ரகுபர் தாஸ் தெரிவித்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close