ஜெ.என்.யூ கல்வி கட்டணம் உயர்வு : 'படிப்பை பாதியில் நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை’ - மாணவர்கள் வருத்தம்

40% மாணவர்களின் குடும்பத்தினர் மாதத்திற்கு ரூ. 12 ஆயிரத்துக்கும் குறைவான வருமானம் கொண்டவர்கள்!

 Aranya Shankar

JNU fee hike has many worried : ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் கல்லூரி கட்டணம் அதிகரித்து அறிவிப்புகள் வெளியானது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களின் நியாயமான கோரிக்கைகளை முன் வைத்தனர். மாணவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸ், ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களிடம், கட்டண உயர்வு குறித்து கேள்வி எழுப்பியது. 2017ம் ஆண்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, இந்த பல்கலைக்கழகத்தின் 40% மாணவர்களின் வீட்டு வருமானம் மாதத்திற்கு ரூ. 12 ஆயிரம் வரை மட்டுமே என்பது தெரியவந்துள்ளது.

கம்ரான் நெசமி அன்சாரி (22), 2ம் ஆண்டு எம்.ஏ ரஷ்யன் படிக்கும் மாணவர்

பிகாரின் சாசரம் பகுதியில் பிறந்த வளர்ந்த கம்ரான் தன்னுடைய பள்ளிப்படிப்பினை அரசு பள்ளியில் தான் படித்தார். அவருடைய அப்பா பிங்கான் பாத்திரங்கள் விற்கும் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய மாத சம்பளம் ரூ. 6 ஆயிரம் முதல் ரூ. 7 ஆயிரம் வரை. கம்ரானின் தம்பி அலிகார் பல்கலைக்கழகத்தில ஜெர்மன் மொழி கற்று வருகிறார். சாசரமில் கம்ரானின் தங்கை 9ம் வகுப்பு படித்து வருகிறார். மெரிட் மூலம் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற கம்ரானுக்கு மத்திய அரசு ஸ்காலர்ஷிப்பாக ரூ. 2000 வழங்கி வருகிறது. வீட்டில் இருந்தும் சில நேரங்களில் பணம் அனுப்பப்படுகிறது. “ஒரு 10 ரூபாய் இருந்தாலும் கூட இங்கு வாழ்ந்து கொள்ளலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் இதற்கு மேல் வீட்டில் இருந்து பணம் ஏதும் வாங்க இயலாது. கல்லூரி படிப்பை பாதியில் விடுவதை தவிர வேறு ஏதும் வழி தெரியவில்லை” என்று கூறுகிறார் கம்ரான்.

ராகேஷ் குமார் (19 வயது) பி.ஏ ஸ்பெனிஷ் படிக்கும் முதலாமாண்டு மாணவர்

ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மரில் இருந்து படிக்க வந்துள்ளார் ராகேஷ் குமார். அவருடைய அப்பா ஒரு விவசாயி. அவருடைய அப்பாவிடம் 30 பிகாக்கள் உள்ளன. ஆனால் அதில் 5 முதல் 7 பிகாக்கள் நிலத்தில் மட்டுமே விவசாயம் செய்ய இயலும். ஒரு வருடத்திற்கு ரூ. 40 ஆயிரம் மட்டுமே வருமானமாக வரும் என்று தெரிவிக்கிறார். ராகேஷ் குமார் பள்ளி படித்துக் கொண்டிருக்கும் போது, அவருடைய அண்ணன் குடும்ப சூழல் காரணமாக பள்ளியில் இருந்து வெளியேறினார். தற்போது சூரத்தில் இருக்கும் எஃகு தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். என்னால் நிச்சயமாக இந்த கட்டண உயர்வை ஏற்றுக் கொள்ள இயலாது. படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வேலைக்கு தான் நான் செல்ல வேண்டும்.

To read this article in English

உஸ்மான் அகமது (20 வயது) பி.ஏ. பஷ்தோ மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்

உஸ்மான் அகமது உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். மாத கட்டணம் ரூ.100க்கும் குறைவாக வசூலிக்கப்பட்ட பொதுப்பள்ளியில் படித்து கல்வி கற்றவர். 5 வருடங்களுக்கு முன்பு அவருடைய தந்தை மாரடைப்பு நோயால் மரணமடைந்துவிட்டார். குதிரைக்கு லாடம் கட்டும் பணியை அவர் மேற்கொண்டிருந்தார். அவர் இறந்த பின்பு வீட்டின் வருமானம் கேள்விக்குறியானது. உஸ்மானின் அண்ணன்களில் ஒருவர் தையற்கலைஞராகவும், மற்றொருவர் மெக்கானிக்காவும் உள்ளார். உஸ்மானின் தம்பிகளில் ஒருவர் அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். மற்றொருவர் 10ம் வகுப்பு படித்து வருகிறார். என்னுடைய அண்ணன் மாதத்திற்கு ரூ. 3 ஆயிரம் சம்பாதித்து வீட்டுக்கு அனுப்புகிறார். இந்த கல்விக்கட்டணம் மேலும் உயர்ந்தால் வீட்டுக்கு செல்வதை தவிர வேறு வழியேதும் இல்லை.

முக்மது ஷாத் (23 வயது) எம்.ஏ ஜெர்மன் முதலாமாண்டு படிக்கும் மாணவர்

உ.பி.யின் சஹரான்பூரை சேர்ந்தவர். ஏ.எம்.யூவில் பட்டப்படிப்பை பெற்றார். அம்மாநிலத்தின் சிறுபான்மையினருக்கான உதவித்தொகை கிடைக்கப் பெறுவதால் கல்வி கட்டணத்தை சமாளித்து வருகிறேன். கொஞ்சம் இருக்கும் மீதப்பணத்தில் மெஸ்க்கான கட்டணத்தையும் செலுத்துகின்றேன். என் அப்பா வைத்திருக்கும் 10 பிகாஸ் நிலத்தில் தான் எங்களின் வாழ்வாதாரம். வருடத்திற்கு ரூ. 50 ஆயிரத்துக்கும் குறைவான வருமானத்தில் தான் குடும்பம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஏ.எம்.யூவில் ஷாத்தின் தங்கை பேஷன் டிசைனிங் படித்து வருகிறார். ”என்னுடைய மாமா என்னுடைய இதர தேவைகளை கவனித்து கொள்கிறார். என்னுடைய குடும்பத்தினர் கடனால் உழன்று வருகின்றனர் என்பது எனக்கு நன்றாகவே தெரியும், ஆனால் அவர்கள் அது குறித்து வெளிப்படையாக அறிவிக்கமாட்டார்கள். மைனாரிட்டி ஸ்காலர்ஷிப்பாக ரூ. 2000 மற்றும் ட்யூசன் எடுப்பதன் மூலம் ரூ. 3000 பணத்தை வைத்து என்னுடைய தேவையை தீர்த்து வருகின்றேன். ஒன்று நான் கல்விக்கடன் வாங்க வங்கிக்கு செல்ல வேண்டும். அல்லது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வேலைக்கு செல்ல வேண்டும்.

நந்தினி ஷர்மா (25 வயது) எம்.ஏ பஷ்தோ படிக்கும் முதலாமாண்டு மாணவி

பிகாரின் தனப்பூரில் நந்தினி முதலாமாண்டு பஷ்தோ படித்து வருகிறார். அவருடைய தந்தை ஒரு விவசாயி. அவர்களுடைய நிலத்தில் இருந்து வரும் வருமானம் தான் அவர்களின் வாழ்வாதாரம். வருடத்திற்கு ரூ. 90 ஆயிரம் வரை வருமானம் ஈட்டப்படுவதாக அறிவிக்கிறார் நந்தினி ஷர்மா. ஷர்மாவின் தங்கை பாட்னா பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஆங்கிலம் படித்து வருகிறார். இதர தேவைகளுக்காக டியூசன் எடுத்து வருகின்றேன். அதன் மூலம் மாதம் 3 ஆயிரம் சம்பாதிக்கின்றேன். கல்வி கட்டணம் மேலும் உயருமென்றால் படிப்பை நிறுத்துவது தான் தீர்வாக அமையும்.

விகால்ப் குமார் (24) ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் எஸ்தெடிக்ஸ் (எம்.ஏ முதலாமாண்டு மாணவர்)

மத்திய பிரதேசம் மாநிலத்தின் ஹோஷாங்காபாத்தில் இருக்கும் பிபரியாயில் பிறந்தவர் விகால்ப் குமார். ஃபைன் ஆர்ட்ஸ் பிரிவில் எம்.எஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் விகால்ப். அவருடைய அப்பா ஃப்ரீலான்ஸ் ஜெர்னலிஸ்டாக பணியாற்றுகிறார் அவர். இவர்களின் ஆண்டு வருமானம் ரூ.60 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது என்று கூறும் விகால்ப், இந்த கட்டண உயர்வு எங்களால் சமாளிக்க இயலாததாக இருக்கும் என்று அறிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close