டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிரியாணி சமைத்து சாப்பிட்டதாக, அப்பல்கலைக்கழக நிர்வாகம் 4 மாணவர்களுக்கு ரூ.6,000 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.
இதுகுறித்து, ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தின் தலைமை ஒழுங்குக் கண்காணிப்பு அதிகாரி கௌஷல் குமார் அனுப்பிய நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
அபராதம் விதிக்கப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் நிர்வாக அலுவலக கட்டடம் அருகே கடந்த ஜூன் மாதம் 27 அன்று பிரியாணி சமைத்து உண்டது விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்களின் இந்த செயல் விதிமீறல் எனவும், அதனால், இத்தகைய கண்டிப்பான ஒழுங்கு நடவடிக்கைக்கு உரியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பமாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனவும் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
சேப்பல் ஷேர்பா, அமீர் மாலிக், மனீஷ் குமார் ஆகிய 3 மாணவர்களுக்கு ரூ.6,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜே.என்.யு.வின் மாணவ சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் சதர்பா சக்ரபர்த்திக்கு ரூ.10,000 அபராதமாக விதிக்கப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகம் முன்பு அமர்ந்து, துணைவேந்தர் நிர்வாகம், பேராசிரியர் அதுல் ஜோஹ்ரி ஆகியோருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியதாகவும், தலைமை பாதுகாப்பு அலுவலரின் வலியுறுத்தலுக்கு பின்பும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டதாக, சதர்பா சக்ரபர்த்தி மீது மற்றொரு குற்றச்சாட்டும் உள்ளது. அதனால், அவருக்கு கூடுதலாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த்க அபராதத் தொகையை செலுத்த 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், பல்கலைக்கழகத்தின் தலைமை ஒழுங்கு கண்காணிப்பு அதிகாரியை தொடர்புகொண்டபோது, எந்த விதமான பதிலும் அளிக்கப்படவில்லை.
இதுகுறித்து பேசிய சதர்பா சக்ரபர்த்தி, "யார் எதை சாப்பிடுகிறார்கள்?, சமைக்கிறார்கள்? என்பதை கண்காணிப்பதுதான் ஒழுங்கு கண்காணிப்பு அதிகாரியின் பணியா? நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருக்கும் மாணவர்களின் கலாச்சாரத்தை பிரதிபலிப்பது குற்றமா?", என கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் நிலவும் பிரச்சனைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பும் மாணவ அமைப்புகளை கொண்டுள்ள ஜே.என்.யு.வில், மானவர்களுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது போராட்டங்களை ஒடுக்குவதற்கான செயலாகவே பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.