உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தீபக் மிஸ்ரா உச்ச நீதிமன்றத்தின் 45-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றிருக்கிறார். இவர் 14 மாதங்கள் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிப்பார். அதன்படி, 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை இவர் தலைமை நீதிபதியாக நீடிப்பார்.
பல்வேறு மாநில உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி அனுபவம் பெற்றவர் நீதிபதி தீபக் மிஸ்ரா. நீட் தேர்வு, ஆதார் வழக்கு, நீதிபதி கர்ணன் விவகாரம், மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு, நிர்பயா வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் முக்கிய உத்தரவு பிரப்பித்த அமர்வில் இவர் இடம்பெற்றுள்ளார்.