உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வந்த ஜே.எஸ்.கெஹர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த ஜனவரி மாதம் 4-ம் தேதி நியமனம் செய்யப்பட்டார். இவரது பதவிக்காலம் வருகிற 27-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியை நியமனம் செய்யும் பணிகளை மத்திய சட்ட அமைச்சகம் மேற்கொண்டது. உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை தற்போது தலைமை நீதிபதியாக இருப்பவர் தான் பரிந்துரைக்க வேண்டும். அதன் அடிப்படையில், நீதிபதி தீபக் மிஸ்ராவின் பெயரை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் பரிந்துரை செய்தார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ராவை நியமனம் செய்து மத்திய சட்ட அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தலைமை நீதிபதியாக அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை அவர் பதவி வகிப்பார்.
கடந்த 1977-ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்த தீபக் மிஸ்ரா, பாட்னா, டெல்லி உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர். நிர்பயா, ஜல்லிக்கட்டு, யாகூப் மேமன் வழக்குகளில் முக்கிய தீர்ப்புகளை தீபக் மிஸ்ரா வழங்கியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
கடந்த 1996-ஆம் ஆண்டு ஒடிசா மாநில உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக தீபக் மிஸ்ரா பணியமர்த்தப்பட்டார். 1997-ஆம் ஆண்டில் மத்திய பிரதேச மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். பாட்னா உயர் நீதிமன்றத்தில் 2009-ஆம் ஆண்டில் தலைமை நீதிபதியாக பணியமர்த்தப்பட்ட இவர், 2011-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
சர்ச்சைக்குரிய ராம்ஜென்மபூமி-பாபர்மசூதி இடம் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட பலர் உச்ச நீதிம்னட்ரத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்குகள் குறித்து, வருகிற 11-ம் தேதி முதல் விசாரிப்பதற்காக மூன்று நீதிபதிகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் அண்மையில் அமைத்து உத்தரவிட்டார். அதில், தீபக் மிஸ்ராவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.