மனநல பரிசோதனைக்கு மறுப்பு... சோதனையானது நீதிபதியை அவமதிப்பதற்கு சமம்: சி.எஸ். கர்ணன்

உச்சநீதிமன்றத்தின் இதுபோன்ற உத்தரவானது நீதிபதியை அவமதிக்கும் வகையில் உள்ளது

தமிழகத்தைச் சேர்ந்த சி.எஸ். கர்ணன், தற்போது கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ளார். இவர், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கி‌ஷன் கவுல் உள்ளிட்ட பல நீதிபதிகள் மீது ஊழல் புகார் தெரிவித்தார். இதையடுத்து, உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து சிஎஸ் கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது.

இந்த வழக்கில் ஆஜராகுமாறு சிஎஸ் கர்ணனுக்கு உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பியது. எனினும், அவர் ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிபதி கர்ணன் கடந்த மாதம் 31–ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஜே.செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், பினாகி சந்திர கோஷ், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு ஆஜரானார். இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க நீதிபதி கர்ணனுக்கு 4-வார காலம் அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், நீதிபதி கர்ணன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் 7 பேரும் , தன் முன்பு ஆஜராக வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். இதன் காரணமாக, நீதிபதி கர்ணன் மீது கடந்த மே 1-ம் தேதி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது.

அதில் நீதிபதி கர்ணனுக்கு கொல்கத்தா அரசு மருத்துவமனை மருத்துவக் குழு  மனநல மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும். பின்னர் அது தொடர்பான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர். மேலும், நீதிபதி கர்ணன் பிப்ரவரி 8-ந் தேதிக்கு பிறகு பிறப்பித்த எந்த உத்தரவையும் செயல்படுத்த வேண்டாம் என்று கீழ் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.

இந்நிலையில். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து கொல்கத்தா அரசு மருத்துவ மனையைச் சேர்ந்த மனநல மருத்துவக் குழு, இன்று மதியம் கொல்கத்தாவில் உள்ள நீதிபதி எஸ்.கர்ணன் வீட்டுக்கு சென்றனர். 4 பேர் கொண்ட அந்த மருத்துவக் குழுவுடன் போலீஸ் உயரதிகாரிகளும் சென்றனர்.

வீட்டிற்கு வந்த மருத்துவக் குழுவிற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காத கர்ணன், மருத்துவக் குழுவை வழக்கமான முறையில் உபசரித்தார். பின்னர் மருத்துவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த கர்ணன், மனநல பரிசோதனைக்கு உட்பட மறுப்பு தெரிவித்து விட்டார். தான் வழக்கம்போல இயல்பான மனநிலையில்  இருப்பதாக கர்ணன் அந்த மருத்துவக் குழுவிடம் தெரிவித்தார். மேலும், எழுதப்பட்ட குறிப்பு ஒன்றையும் மருத்துவரிடம் வழங்கினார். அதில், “நான் நல்ல மனநிலையில் இருப்பதால், இந்த மனநல பரிசோதனைக்கு உடன்பட மறுப்பு தெரிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், உச்சநீதிமன்றத்தின் இதுபோன்ற உத்தரவானது நீதிபதி ஒருவரை அவமதிப்பதற்கு சமமாகும் என்றார்.

ஒருவருக்கு மனநல பரிசோதனை செய்ய வேண்டும் என்றால் அவருடன் துணைக்கு ஒருவர் இருக்க வேண்டும். ஆனால், என்னுடன் யாரும் தற்போது வீட்டில் இல்லை என்பதால், மனநல பரிசோதனை நடத்த இயலாது என்று கர்ணன் தெரிவித்தார். கர்ணனின் மனைவி மற்றும் மகன் தற்போது சென்னையில் உள்ளனர். மற்றொரு மகன் பிரான்ஸ் நாட்டில் பணிபுரிந்து வருகிறார்.

மருத்துவக் குழுவானது இது குறித்த தகவல்களை  வரும் 18-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யவுள்ளது. அதன் பின்னரே உச்ச நீதிமன்றம் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் என கூறப்படுகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close