உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகளுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை!!! சிஎஸ் கர்ணன் உத்தரவு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஎஸ் கெஹர் உள்ளிட்ட 7 நீதிபதிகளுக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சிஎஸ் கர்ணன் உத்தரவு

By: Updated: May 8, 2017, 09:12:27 PM
தமிழகத்தைச் சேர்ந்த சி.எஸ். கர்ணன், தற்போது கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ளார். இவர், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கி‌ஷன் கவுல் உள்ளிட்ட பல நீதிபதிகள் மீது ஊழல் புகார் தெரிவித்தார். இதையடுத்து, உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து சிஎஸ் கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது.
இந்த வழக்கில் ஆஜராகுமாறு சிஎஸ் கர்ணனுக்கு உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பியது. எனினும், அவர் ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிபதி கர்ணன் கடந்த மாதம் 31–ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஜே.செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், பினாகி சந்திர கோஷ், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு ஆஜரானார்.
இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க நீதிபதி கர்ணனுக்கு 4-வார காலம் அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், நீதிபதி கர்ணன், உச்ச நீதிமன்ற  நீதிபதிகள் 7 பேரும் , தன் முன்பு ஆஜராக வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். இதன் காரணமாக, நீதிபதி கர்ணன் மீது கடந்த மே 1-ம் தேதி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது.
அதில் நீதிபதி கர்ணனுக்கு கொல்கத்தா அரசு மருத்துவமனை மருத்துவக் குழு  மனநல மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும். பின்னர் அது தொடர்பான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர். மேலும், நீதிபதி கர்ணன் பிப்ரவரி 8-ந் தேதிக்கு பிறகு பிறப்பித்த எந்த உத்தரவையும் செயல்படுத்த வேண்டாம் என்று கீழ் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து கொல்கத்தா அரசு மருத்துவ மனையைச் சேர்ந்த மனநல மருத்துவக் குழு, கடந்த 4-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள நீதிபதி எஸ்.கர்ணன் வீட்டுக்கு சென்றனர்.  வீட்டிற்கு வந்த மருத்துவக் குழுவிற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காத கர்ணன், மருத்துவக் குழுவை வழக்கமான முறையில் உபசரித்தார். பின்னர் மருத்துவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த கர்ணன், மனநல பரிசோதனைக்கு உட்பட மறுப்பு தெரிவித்து விட்டார்.  தான் வழக்கம்போல இயல்பான மனநிலையில்  இருப்பதாக கர்ணன் அந்த மருத்துவக் குழுவிடம் தெரிவித்தார்.
இந்நிலையில், நியூஸ்18 தொலைக்காட்சி  இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. அதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஎஸ் கெஹர் உள்ளிட்ட 7 நீதிபதிகளுக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சிஎஸ் கர்ணன் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Justice karnan sentences cji 7 sc judges to 5 years prison

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X