‘குழந்தைகள் மரணம் சோகம் அல்ல, படுகொலை!’ கைலாஷ் சத்யார்த்தியை வழிமொழிந்த கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் உ.பி. குழந்தைகள் பலி சம்பவம் குறித்து ட்விட்டரில் இன்று கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவமனை கல்லூரியில் கடந்த 5 நாளில் 72 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், அந்த மருத்துவமனையில் கடந்த 2012 முதல் தற்போது வரை 3 ஆயிரம் குழந்தைகள் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த 30 வருடங்களில், அங்கு ஜப்பானிய மூளைகாய்ச்சல் உள்ளிட்ட சில காய்ச்சல் காரணமாக 50 ஆயிரம் குழந்தைகள் இறந்துள்ளனர்.

கோரக்பூர் தொகுதி, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதியாகும். மூன்று தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பார்வையிட்ட நாளில் மட்டும் 9 பேர் உயிரிழந்தனர்.

இன்று(ஞாயிறு) காலையும், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவும் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேச அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் இச்சம்பவம் குறித்து ட்விட்டரில் இன்று கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உ.பி., முதல்வரிடம் கைலாஷ் சத்யார்த்தி சொன்னது தான் சிறந்த தீர்வு. இது போன்ற இன்னதொரு சம்பவம் நிகழக்கூடாது. இந்த இழப்பால் இந்தியா துக்கம் அனுசரிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, அமைதிக்கான நோபல் பரிசு வாங்கியவரும், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புக்காகப் போராடிவருபவருமான கைலாஷ் தனது ட்விட்டரில் இச்சம்பவம் குறித்து, “மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாததால் குழந்தைகள் இறந்துள்ளது சோகம் அல்ல. இது ஒரு படுகொலை. இத்தகைய சம்பவங்களை உடனடியாக தடுக்க உ.பி. முதல்வரான யோகி ஆதித்யநாத்தின் தீர்க்கமான முடிவு தேவை. அப்போதுதான், பல ஆண்டுகளாக உ.பி.யில் நடந்துவரும் மருத்துவ முறைகேடுகளை களைய முடியும்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close