மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்திக்க நடிகர் கமல்ஹாசன் இன்று காலை கொல்கத்தா புறப்பட்டு சென்றார்.
நடிகர் கமலாசன் தனது பிறந்தநாளான அன்று தான் 'அரசியலுக்கு வந்துவிட்டேன்", என அறிவித்தார். அதுமட்டுமல்லாமல், 'மய்யம் விசில்' என்ற செயலியையும் அறிமுகப்படுத்தினார். அரசியலில் தான் எந்த வடிவத்தில் பயணிக்க போகிறேன் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அன்றைய தினம் கமல்ஹாசன் கூறினார்.
முன்னதாக, தீவிர அரசியலில் இறங்க தயாரான கமல், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை சந்தித்து ஆலோசனை கேட்டார். மேலும், தமிழக அரசையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில், கமலாசன் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தாவில் இன்று (வெள்ளிக்கிழமை) கொல்கத்தா சர்வதேச திரைப்பட திருவிழா துவங்க உள்ளது. இதனை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமை வகிக்கிறார். நடிகர் அமிதாப் பச்சன் இந்த திரைப்பட விழாவை துவங்கி வைக்க, நடிகர்கள் ஷாருக்கான், கமலாசன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, காலை 11.15 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து கொல்கத்தா புறப்பட்டு சென்றார். இந்த நிகழ்வுக்கு முன்னதாகவோம், அல்லது நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னரோ, நடிகர் கமலாசன் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.