Advertisment

பிரபல கன்னட எழுத்தாளர், தலித் செயற்பாட்டாளர் சித்தலிங்கையா மரணம்; தலைவர்கள் இரங்கல்

தலித் இளைஞர் இயக்கத்தில் கூட, ஒருவித வெறித்தனம் உருவாகியுள்ளது என்று அவர் 2016-ம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் உடனான நேர்காணலில் கூறியிருந்தார். இந்த குழுக்கள் ஒரு தலித் ஆர்.எஸ்.எஸ் போல செயல்படுகின்றன.

author-image
WebDesk
New Update
பிரபல கன்னட எழுத்தாளர், தலித் செயற்பாட்டாளர் சித்தலிங்கையா மரணம்; தலைவர்கள் இரங்கல்

பிரபல கன்னட கவிஞர், நாடக ஆசிரியர், தலித் ஆர்வலர், பேராசிரியர் என பன்முகத் தன்மை கொண்ட சித்தலிங்கையா பெங்களூரில் கொரோனா வைரஸ் தொடர்பான சிக்கல்களால் வெள்ளிக்கிழமை மாலை காலமானார். அவருக்கு வயது 67.

Advertisment

சித்தலிங்கையா பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை எடுத்து வந்தார்.கடந்த மே 2-ம் தேதி அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், தொற்று உறுதி செய்யப்பட்டு மே 5 ஆம் தேதி மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

1954-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி ராமநகர மாவட்ட மாகடியில் பிறந்தவர் சித்தலிங்கையா. கன்னடத்தில் தலித்-பண்டாயா இயக்கத்தைத் தொடங்கியதோடு, கன்னட இலக்கியத்தில் தலித் எழுத்து வகையைத் தொடங்கிய பெருமையும் சித்தலிங்கையாவையே சாரும். 1975 ஆம் ஆண்டில் தனது முதல் கவிதைத் தொகுப்பான `ஹோல் மடிகரா ஹடு’ வெளியான காலத்திலிருந்து அவர் கடநாடகாவின் தலித் மக்களின் குரலாக ஒலிக்கத் தொடங்கினார். சுதந்திரம் பெற்றது யார்? 1947-ல் நாம் பெற்ற சுதந்திரம் எங்கே?' எனும் சித்தலிங்கையாவின் படைப்பு கர்நாடகாவில் தலித் இயக்கத்தின் ஒரு கீதமாகவே மாறியது.

1996-ம் ஆண்டு வெளியிடப்பட்ட சித்தலிங்கையாவின் சுயசரிதை புத்தகம், ‘ஊரும் சேரியும் - வில்லேஜ் கார்னர் எனும் புத்தகம் தலித்துகளின் இருப்பின் கடுமையின் கதையை உலகிற்கு எடுத்து கூறியது. தத்துவ மற்றும் நகைச்சுவையான தொனியைப் பயன்படுத்துவதே சித்தலிங்கையாவின் எழுத்தின் அடையாளமாகும். தன்னை ஒரு எழுத்தாளர், ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி என்ற முறையில் தனது வாழ்க்கை குறித்த ஒரு பார்வையை வாசகர்களுக்கு அளிக்கும் விதமாக, ‘ஊரும் சேரியும்’ பகுதி 2 மற்றும் 3 ஆகிய பகுதிகளையும் எழுதியுள்ளார். இவரின் ஊரும் சேரியும் நூலுக்கு சாகித்திய அகாடமி விருது அளித்தும் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 14, 1968 அன்று அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு 15 வயது பள்ளி சிறுவனாக சித்தலிங்கையா உரை நிகழ்த்தினார். அதுவே அவரது அரசியல் குரலுக்கு உத்வேகம் அளித்ததாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 1980 மற்றும் 1990 களில் கர்நாடகாவில் தலித் அரசியலில் முன்னணியில் இருந்த சித்தலிங்கையா, சமூகத்தின் உரிமைகளுக்கான முக்கிய குரலான தலித் சங்கர்ஷா சமிதியின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார்.

‘தலித் சார்புடைய தாராளவாத சிந்தனையாளர்களையும் தாராளவாத மரபுகளையும் வளர்க்க வேண்டும்’

தனது பிற்காலத்தில் ஒரு மிதவாதி மற்றும் ஒரு சோசலிஸ்டாகக் கருதப்பட்ட சித்தலிங்கையா, தலித் சமூகத்தின் இளம் உறுப்பினர்கள் சமீபத்திய ஆண்டுகளில் அவரை சமூகத்தின் துரோகி என்று நினைக்கத் தொடங்கினர், பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களுடன் கூட்டணி வைக்க முயன்றதே காரணமாக சொல்லப்பட்டது.

தலித் இளைஞர் இயக்கத்தில் கூட, ஒருவித வெறித்தனம் உருவாகியுள்ளது என்று அவர் 2016-ம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் உடனான நேர்காணலில் கூறியிருந்தார். இந்த குழுக்கள் ஒரு தலித் ஆர்.எஸ்.எஸ் போல செயல்படுகின்றன. அவர்களுக்கு பரந்த சிந்தனை இல்லை. மொத்த சமூக மாற்றத்திற்கான கனவு இல்லை. இது ஒரு தனிநபரை மையமாகக் கொண்ட சித்தாந்தமாகும். அம்பேத்கரின் சித்தாந்தம் அல்லது மார்க்சிய சித்தாந்தத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனவும் கூறினார்.

தலித் இயக்கத்திற்கு உதவுவதற்காக தலித் சார்புடைய தாராளவாத சிந்தனையாளர்களையும் தாராளவாத மரபுகளையும் நாம் வளர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார். நாங்கள் இந்த அம்சத்தை புறக்கணிக்கிறோம். மதம் மற்றும் கடவுள் என்ற பெயரில் மக்களை சுரண்டுவதை எதிர்க்கும் தலித்துகள் அல்லாதவர்களிடையே ஒரு சிறிய பிரிவு உள்ளது. இந்த தளத்தை நாம் பெரிதாக்க வேண்டும். பல ஆண்டுகளாக பெங்களூர் பல்கலைக்கழகத்தில் கன்னட ஆய்வுத் துறையின் தலைவராக இருந்த பேராசிரியர் சித்தலிங்கையா, அம்பேத்கர் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராகவும் இருந்துள்ளார். இதன் மூலம் மாணவர்களுக்கு அம்பேத்கர் மற்றும் அவரது சிந்தனை கற்பித்து வந்தார்.

தலித் மாணவர்களிடையே கூட அம்பேத்கரைப் பற்றிய மேலோட்டமான புரிதல் மட்டுமே உள்ளது. கடந்த 2,000 ஆண்டுகளில் அடக்குமுறைக்காக மற்ற சமூகங்கள் மீதுள்ள வெறுப்பிலும் இந்த உறவு வேரூன்றியுள்ளது என்று சித்தலிங்கையா 2016 ல் கூறியிருந்தார். நிறைய தலித் சிந்தனையின் வேரில் பழிவாங்குவதற்கான விருப்பம் உள்ளது. இது தலித்துகள், தலித்துகள் அல்லாதவர்கள் மற்றும் தேசத்திற்கு ஆபத்தானதாகும். அம்பேத்கர் ஒரு நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருந்தார். கோபம் மற்றும் பழிவாங்கல் ஆகியவற்றின் மூலம் அவர் தலித் பிரச்சினைகளைப் பார்க்கவில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.

சித்தலிங்கையா 1988-1994 மற்றும் 1995-2001 க்கு இடையில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். கன்னட அபிவிருத்தி ஆணையம் மற்றும் கர்நாடக புத்தக ஆணையத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்தார். அவருக்கு 2019 ஆம் ஆண்டில் மாநிலத்தின் மிக உயர்ந்த இலக்கிய விருதான பம்பா விருதும், 1986 இல் ராஜ்யோத்ஸவ விருதும் வழங்கப்பட்டது.

நினைவுக் கூறப்படும் கவிதைகளும் சமூக நீதிக்கான நினைவுக் கூறப்படும் பங்களிப்புகளும் :

புகழ்பெற்ற கவிஞருக்கும் எழுத்தாளருக்கும் அஞ்சலி செலுத்தும் பிரதமர் நரேந்திர மோடி, சித்தலிங்கையா தனது ஏராளமான எழுத்துக்கள், கவிதைகள் மற்றும் சமூக நீதிக்கான பங்களிப்புகளுக்காக நினைவுகூரப்படுவார் என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். அவர் மறைந்த செய்தி வருத்தம் அளிக்கிறது. இந்த துயர் மிகுந்த நேரத்தில் அவரின் மறைவு செய்தியை அவரது குடும்பத்தாரோடு பங்கு கொள்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

அவரது மறைவுக்கு கர்நாடக முதலமைச்சர் எடியுரப்பா, அமைச்சர்கள், மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா மற்றும் பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். சித்தலிங்கையா தலித்துகளின் வலியை வார்த்தைகளின் வடிவத்தில் வைத்து மாநிலத்தில் உள்ள தலித் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தார் என எடியூரப்பா தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா, சித்தலிங்கையா ஒரு மகிழ்ச்சியான நகைச்சுவை உணர்வுடன், அன்பான, இரக்கமுள்ள மனிதர் என்று தெரிவித்துள்ளார். கோவிட் தொடர்பான சிக்கல்களில் புகழ்பெற்ற கன்னட கவிஞர் சித்தலிங்கையா காலமானதைக் கேட்டு ஆழ்ந்த வருத்தம். அவர் இரக்கமுள்ள மனிதராக இருந்தார், மகிழ்ச்சியான நகைச்சுவை உணர்வைக் கொண்டிருந்தார். ஆங்கிலத்திலும் கிடைக்கும் அவரது சிய சரிதை நூல் ஒரு இலக்கிய உன்னதமானது எனவும் குஹா தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Karnataka State Literature Dalit
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment