கர்நாடக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை தேவைக்கு அதிகமாக இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளதால் அக்கட்சியின் தொண்டர்கள் முதல் தேசிய தலைவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலுக்கு முன்னோட்டமாக கர்நாடக சட்டசபை தேர்தல் பார்க்கப்பட்டது. கர்நாடக சட்டபை தேர்தலின் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்று பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்ததால், கர்நாடக சட்டசபை தேர்தல் இந்தியாவே உற்றுநோக்கும் ஒரு தேர்தலாக மாறியது.
இந்த தேர்தலுக்காக பிரதமர் மோடி ஆளும் பாஜக கட்சிக்காக சுமார் 8 நாட்கள் பிரச்சாரம் மேற்காண்டார். அதேபோல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து கடந்த மே 10-ந் தேதி மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
அதன்பிறகு வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமைந்தது. இதனிடையே தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்க தொடங்கியது. கடந்த சில வருடங்களாக சட்டசபை தேர்தல்களில் பின்னடைவை சந்தித்து வந்த காங்கிரஸ் கட்சிக்கு இந்த முன்னிலை தகவல் பெரும் உற்சாகத்தை கொடுத்தது.
இந்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில், அக்கட்சியில் மூத்த தலைவர்கள் இந்த வெற்றியை கொண்டாட தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில், கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தை பாஜக தனது பிரதமருக்காக பொது வாக்கெடுப்பு போன்ற ஒரு தொற்றத்தை உருவாக்கியதால் நரேந்திர மோடி தோல்வியடைந்துள்ளார் என்று கூறியுள்ளது.
As the results firm up in Karnataka it is now certain that the Congress has won and the PM has lost. The BJP had made its election campaign a referendum on the PM and on the state getting his 'ashirwaad'. That has been decisively rejected!
— Jairam Ramesh (@Jairam_Ramesh) May 13, 2023
The Congress party fought these…
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், தனது ட்விட்டர் பக்கத்தில், கர்நாடகாவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் வெற்றியும், பிரதமரின் தோல்வியும் தற்போது உறுதியாகி உள்ளது. பாஜக இந்த தேர்தலை மாநில தேர்தலாக இல்லாமல் பிரதமருக்கான தேர்தல் போன்று பிரச்சாரம் செய்ததே இந்த வீழ்ச்சிக்கு காரணம்.
மக்களின் வாழ்வாதாரம், உணவுப் பாதுகாப்பு, விலைவாசி உயர்வு, விவசாயிகளின் துயரம், மின்சாரம், வேலையின்மை மற்றும் ஊழல் போன்ற உள்ளூர் பிரச்சினைகளை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலை சந்தித்து. ஆனால் பிரதமர் பிரிவினையை ஏற்படுத்தி வெற்றி பெற முயற்சித்தார். பொருளாதார வளர்ச்சியை சமூக நல்லிணக்கத்துடன் இணைக்கும் கர்நாடகாவில் காங்கிஸ் வெற்றி பெற்றுள்ளது என்று கூறியுள்ளார்.
கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு மே 10ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் வாக்கு எண்ணும் பணி இன்று தொடங்கிய நிலையில், காங்கிரஸ் 100-க்கு மேற்பட்ட இடங்களிலும், பாஜக 70 –க்கு மேற்பட்ட இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. காங்கிரஸ் தலைவர்களான டி.கே.சிவகுமார், சித்தராமையா, பிரியங்க் கார்கே, லக்ஷ்மண் சவடி மற்றும் சதீஷ் ஜார்கிஹோலி வெற்றியாளர்களாக உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“