எடியூரப்பா ராஜினாமாவை தொடர்ந்து, கர்நாடகாவில் அடுத்து என்ன? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. காங்கிரஸ்-மஜத தலைவர்கள் ஆளுனரை சந்திக்கிறார்கள்.
எடியூரப்பா, மே 17-ம் தேதி கர்நாடகா முதல்வராக பதவியேற்றார். மொத்தம் 3 நாட்களே முதல்வர் பதவியில் இருந்ததால், இந்தியாவில் குறைந்த நாட்கள் முதல்வர் பதவியை வகித்தவர் என்கிற பதிவை படைத்திருக்கிறார் எடியூரப்பா!
உச்ச நீதிமன்றம் உத்தரவு அடிப்படையில் இன்று (மே 19) மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டமன்றமான விதான் சவுதாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதாக இருந்தது. காலை 11 மணிக்கு தொடங்கிய சட்டமன்றக் கூட்டத்தில் 210 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர். எஞ்சியவர்கள் உணவு இடைவேளைக்கு பிறகு மாலை 3.30 மணிக்கு கூடிய கூட்டத்தில் பதவியேற்றனர்.
எடியூரப்பா மாலை 3.45 மணிக்கு எழுந்து உரை நிகழ்த்தத் தொடங்கினார். சுமார் கால் மணி நேரம் உருக்கமான உரையை நிகழ்த்தினார் அவர். ‘104 எம்.எல்.ஏ.க்களுக்கு பதிலாக 113 எம்.எல்.ஏ.க்களை தங்களுக்கு தந்திருந்தால், கர்நாடகாவை சொர்க்கமாக மாற்றியிருப்பேன்’ என குறிப்பிட்டார் அவர். உரையின் நிறைவில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், இதனால் தனக்கு தனிப்பட்ட இழப்பு எதுவும் இல்லை என்றும் கூறினார்.
கர்நாடகா ஆளுனர் வாஜூபாய் வாலா வழங்கிய 15 நாள் அவகாசத்தை மாற்றி உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட காரணத்தாலேயே பாஜக.வால் திட்டமிட்டபடி காங்கிரஸ், மஜத கட்சிகளில் இருந்து எம்.எல்.ஏ.க்களை இழுக்க முடியவில்லை என கூறப்படுகிறது. அதுவே எடியூரப்பாவின் ராஜினாமாவுக்கு காரணமாக அமைந்துவிட்டது.
எடியூரப்பா ராஜினாமாவை தொடர்ந்து, கர்நாடகாவில் அடுத்து என்ன என்கிற கேள்விகள் எழுந்திருக்கின்றன. இனி அரசியல் அமைப்புச் சட்டப்படி காங்கிரஸ்-மஜத தலைவர்கள் மீண்டும் ஆளுனரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார்கள். ஏற்கனவே குமாரசாமியை முதல்வர் ஆக்க சம்மதம் தெரிவித்து காங்கிரஸ் கடிதம் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து குமாரசாமிக்கு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ்-மஜத கூட்டணி அமைச்சரவை பதவியேற்கும். எடியூரப்பாவுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுத்தது போலவே குமாரசாமிக்கும் மெஜாரிட்டி கொடுக்க 15 நாட்கள் அவகாசத்தை ஆளுனர் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே குமாரசாமியும் சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபித்துக் காட்டியாக வேண்டும்.
78 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட காங்கிரஸ், 37 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட மஜத.வுக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பதால் அமைச்சரவையில் முக்கிய இலாகாக்களை எதிர்பார்க்கும். அதேபோல ஒவ்வொரு பிரச்னையிலும் இந்த இரு கட்சிகளும் எப்படி ஒத்துப் போகின்றன? என்பதைப் பொறுத்தே குமாரசாமி ஆட்சியின் ஆயுளும் அமையும்.