சசிகலாவுக்கு எதிராக புகார் கொடுத்த டிஜஜி ரூபாவுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்!

சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த டிஜஜி ரூபாவுக்கு குடியரசுத் தலைவர் விருது

பெங்களூரு சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த டிஜஜி ரூபாவுக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில், சிறைதண்டனை பெற்று வரும் சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சசிகலாவிற்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டதை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார்கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி ரூபா. அவருக்கு, நேற்று குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

2000-ம் ஆண்டில் நடந்த குடிமைப் பணி தேர்வில் ஐபிஎஸ் அதிகாரியாக ரூபா மவுட்கில் தேர்ச்சி பெற்றார். இவர் கர்நாடக மாநில காவல் துறையில் பிதார் மாவட்ட காவல் கண்காணிப்பாக பணியாற்றினார். கனிமவள கொள்ளையர்களை கண்காணித்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டார்.

இவர், நேர்மையாக பணியாற்றியதனால் என்னவோ, அவர் அடிக்கடி பணியிடை மாற்றம் செய்யப்பட்டுவந்தார். மத்திய பிரதேச மாநிலத்தில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியபோது, கலவர வழக்கு ஒன்றில் நீதிமன்ற உத்தரவின்படி மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் உமா பாரதியை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக சிறைத் துறை டிஐஜியாக பொறுப்பேற்ற ரூபா, சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு சலுகை அளிக்கப்பட்டதாக ரூபா குற்றம்சாட்டினார்.

சிறையில் சிறப்பு வசதிகள் செய்யப்படுவதற்காக, சசிகலா தரப்பினர் சிறைத்துறை டிஜிபி-யான சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டை முன்வைத்த ரூபா, இந்த விவகாரம் தொடர்பாக உள்துறைக்கு கடிதம் அனுப்பினார். மேலும், ஊடகங்கள் மூலம் அவர் இந்த குற்றச்சாட்டு நடந்தது உண்மை என உறுதியாக கூறிவந்தார். இந்த விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட்டார் முதலமைச்சர் சித்தராமையா.

மேலும், ரூபா ஊடகங்களிடம் பேட்டி அளிக்கக் கூடாது என முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டிருந்தார். ஆனாலும், ரூபா தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வந்தார். இதன் காரணமாக, பெங்களூரு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையராக ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பல்வேறு விவகாரங்களில் துணிச்சலுடன் செயல்பட்டு வந்த ரூபாவிற்கு குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள கர்நாடக ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்யில், ஆளுநர் வஜுபாய் வாலா, சிறப்பாக பணியாற்றி வரும் ரூபாவுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கி கௌரவித்தார்.

கடந்த 2016-ம் ஆண்டில், ரூபாவுக்கு குடியரசுத் தலைவரின் காவல் துறை பதக்கம் வழங்கப்பட்டது என்பதும் கவனிக்கத்தக்கது.

×Close
×Close