கர்நாடக சட்டமன்றத் தேர்தல் 2018: ஆளுநர் முன் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அணிவகுக்க அனுமதி மறுப்பு

கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2018 முடிவுகள் இரண்டாம் நாள் LIVE UPDATES

கர்நாடக சட்டமன்ற தேர்தல் 2018: ஆளும் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே கர்நாடக தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவியது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்தனர். கடந்த 12-ம் தேதி அங்கு தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்களில் வாக்குப்பதிவு நடந்தது. ஜெயநகர் தொகுதியிலும் ராஜராஜேஸ்வரி தொகுதியிலும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆரம்பம் முதலே பாஜக முன்னிலை வகித்தது. எனினும் ஆட்சியமைக்க தேவையான 113 இடங்கள் பாஜகவுக்கு கிடைக்கவில்லை. 104 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதும், பெரும்பான்மை கிடைக்கவில்லை.

அதேசமயம், 221 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 78 இடங்களை மட்டுமே கைப்பற்ற, மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது.

இதையடுத்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவ கவுடாவை தொலைபேசியில் அழைத்து பேசினார். அப்போது, ஜேடிஎஸ் தலைமையில் ஆட்சியமைக்க காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என்று அவர் உறுதியளித்தார். இந்த ஆதரவை தேவகவுடா ஏற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து, தேவ கவுடாவின் மகனும் மஜத தலைவருமான குமாரசாமி நேற்று ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதேபோல், பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

தற்போது ஆளுநரின் முடிவுக்காக குமாரசாமியும் எடியூரப்பாவும் காத்திருக்கின்றனர். அதிக இடங்களைக் கைப்பற்றிய கட்சி என்ற அடிப்படையில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கலாம் என்று கர்நாடக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இப்படிப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில் நகரும் கர்நாடக தேர்தல் விவகாரம் குறித்த Live Updates-ஐ நீங்கள் ஐஇதமிழ்-ல் உடனுக்குடன் காணலாம்.

மாலை 06.15 – தங்களது தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக 3 கர்நாடக பாஜக எம்பிக்கள் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் அனுப்பியுள்ளனர். சித்தராமையா அரசு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

மாலை 05.40 – காங்கிரஸ், மஜக கட்சியினர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய குமாரசாமி, “மூத்த தலைவர்கள் ஆளுநரை சந்தித்து, பெரும்பான்மையை கருத்தில் கொண்டு முடிவு எடுக்குமாறு வலியுறுத்தினோம். ‘சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து, முடிவெடுத்த பின்னர் தகவல் தெரிவிக்கிறேன்’ என ஆளுநர் பதில் அளித்தார்” என்றார்.

மாலை 05.25 – ராஜ்பவனில், ஆளுநர் முன் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அணிவகுக்க அனுமதி மறுப்பு. சித்தராமையா, குமாரசாமி உள்ளிட்ட சிலருக்கு மட்டுமே உள்ளே நுழைய ஆளுநர் அனுமதி. இதனால், மஜக கட்சியினர் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாலை 05.05 – காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சொகுசுப் பேருந்தில் முதலில் ராஜ் பவனுக்கு கொண்டுச் செல்லப்பட்டு, ஆளுநரை சந்தித்த பின், மைசூரு சாலையில் உள்ள ஈகிள்டன் சொகுசு விடுதிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலை 04.50 – ஆளுநரை சந்திக்க புறப்பட்டார் குமாரசாமி

மாலை 04.10 – கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் அணி தாவலை தடுக்க, ‘கூவத்தூர்’ ஃபார்முலாவில், காங்கிரஸ் கட்சி அவர்கள் அனைவரையும் ரிசார்ட்டில் தங்க வைக்கிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் முழு லிஸ்ட்டோடு சட்டமன்ற உறுப்பினர்கள் சொகுசுப் பேருந்தில் ஏற்றப்பட்டு விடுதிக்கு கொண்டுச் செல்லப்படுகின்றனர்.

மாலை 04.00 – எடியூரப்பாவை அவரது வீட்டில் சந்தித்து விட்டு வரும் பாஜகவின் அனந்த் குமார், தர்மேந்திர பிரதான், ஜேபி நட்டா, முரளிதர் ராவ்.

பிற்பகல் 03.35 – காங்கிரஸ் மற்றும் மஜக கட்சித் தலைவர்கள் இன்று மாலை 5 மணிக்கு கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்திக்க இருக்கின்றனர்.

பிற்பகல் 03.30 – ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்காவிட்டால், நாளை காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரில் ராஜ் பவன் முன்பு ‘தர்ணா’ நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல்.

பிற்பகல் 02.50 – காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மைசூரு சாலையிலுள்ள சொகுசு விடுதிக்கு மாலை 4 மணிக்கு செல்வதாக தகவல்.

பிற்பகல் 02.45 – பெங்களூருவில் மாலை 4 மணிக்கு கர்நாடக ஆளுநருடன் குமாரசாமி சந்திப்பு. குமாரசாமியுடன் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவும் ஆளுநரை சந்திக்கவுள்ளார்

பிற்பகல் 02.35 – குமாரசாமிக்கு ஆதரவாக மஜத மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டனர். இன்று மாலை ஆளுநரிடம் இது சமர்பிக்கப்பட்டு, ஆட்சி அமைக்க உரிமை கோரப்படும்.

பிற்பகல் 02.25 – ‘100 கோடி தருவதாக கூறி, பாஜக எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்கப் பார்க்கிறது’ என குமாரசாமி கூறியிருந்த நிலையில், யூத் காங்கிரஸ் ட்விட்டர் பக்கத்தில் அதற்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 02.00 – ஒருவேளை, பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தால், காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிற்பகல் 01.30 –  ‘யார் அந்த பிரகாஷ் ஜவடேகர் ? பாஜகவை சேர்ந்த யாரும் என்னை சந்திக்கவில்லை ; அது ஒரு பொய் செய்தி’ – குமாரசாமி

பிற்பகல் 01.05 – கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க விரும்பவில்லை. கர்நாடகாவில் பெரும்பான்மை இல்லாத காரணத்தினால், ஆட்சி அமைக்க விரும்பவில்லை. ஆளுநர் காலம் தாழ்த்துவது பாஜகவின் குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் – திருநாவுக்கரசர்

பகல் 12. 45 – தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, “பாஜக, எங்கள் கட்சியில் இருந்து ஒரு எம்.எல்.ஏவை இழுத்தால், நாங்கள் இரு பாஜக எம்.எல்.ஏக்களை இழுப்போம். ‘ஆபரேஷன் கமலா’-வை பாஜக மறந்து விடக் கூடாது” என்றார்.

பகல் 12.15 – செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, “ஆட்சியமைக்க காங்கிரஸ் அளித்த ஆதரவை ஏற்றுக் கொள்கிறோம். எங்களுக்கு வாக்களித்த கர்நாடக மக்களுக்கு நன்றி. பாஜகவுடன் கூட்டணி எனும் பேச்சுக்கே இடமில்லை. பிரிவினை அரசியலை பின்பற்றியதால், பாஜக அதிக இடங்களை வென்றுள்ளது. மணிப்பூர், கோவா, மேகாலயாவில் ஆட்சியை பறித்துக் கொண்டது பாஜக. கர்நாடகாவில் அதிக இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளது என்பதற்காக பாஜகவுக்கு மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளது என்று அர்த்தம் இல்லை. மஜத எம்.எல்.ஏ.க்களுக்கு தலா 100 கோடியும், அமைச்சர் பதவியும் தருவதாக பாஜக ஆசை காட்டி வருகிறது. ஆட்சியை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறது பாஜக. அரசியல் அதிகாரத்தை அனுபவிப்பதற்காக காங்கிரஸ் ஆதரவை ஏற்றுக் கொள்ளவில்லை. முதல்வர் பதவிக்கு நான் ஒருபோதும் ஆசைப்பட்டதில்லை. அதிகாரத்திற்காக ஆசைப்படவில்லை, பிரதமர் பதவியை நாட்டு நலனுக்காக உதறிவிட்டு வந்தது எங்கள் குடும்பம்” என்றார்.

பகல் 12.00 –  மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் கர்நாடக சட்டமன்ற குழுத் தலைவராக குமாரசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல மஜத கட்சி முடிவு.

காலை 11.45 – டெல்லியில் இன்று தொடங்கிய காங்கிரஸ் சட்டமன்ற கூட்டத் தொடரில் 12 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளவில்லை. கர்நாடகாவில் வெற்றிப்பெற்ற 78 எம்.எல்.ஏ.க்களில் 66 பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்று இருக்கின்றனர். இதனால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நொடிக்கு நொடி, கர்நாடக அரசியலில் திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது.

காலை 11.43 – செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, “கர்நாடகாவில் ஆட்சியமைக்க பாஜகவை அழைக்குமாறு ஆளுநர் வஜூபாய் வாலாவை கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆளுநரும், எங்களது கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறினார். சரியான முடிவை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார்” என்றார்.

காலை 11.38 – சுயேட்சை வேட்பாளர் ஆர்.சங்கர் பா.ஜ.கவிற்கு ஆதரவு தெரிவித்து ஆளுநரிடம் கடிதம் அளிக்க ராஜ்பவன் வருகை.

காலை 11.30 – கர்நாடகாவில் காவி கொடிதான் பறக்கும்; அதற்கு பச்சைத்துண்டுக்காரர்கள் (விவசாயிகள்) உறுதுணையாக இருப்பார்கள்- தமிழிசை

காலை 11.25 – கர்நாடகாவில் ஆட்சி அமைக்க எடியூரப்பாவை ஆளுநர் அழைப்பதாக எனக்கு தகவல் வந்தது- சுப்பிரமணியன் சுவாமி.

காலை 11.20 – பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கர்நாடக சட்டமன்ற பாஜக தலைவராக எடியூரப்பா தேர்வு

காலை 11.15 – மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் ராஜ வெங்கடப்பா நாயகா, வெங்கட ராவ் நாதகவுடா கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

காலை 11.00 – மஜதவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது ஆதாய திருமணம் போன்றது. பின்வாசல் வழியாக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைப்பது சரியானது அல்ல. பாஜக ஆட்சி அமைய வேண்டும் என கர்நாடக மக்கள் விரும்புகின்றனர்; அதை நாங்கள் நிறைவேற்றுவோம் – பாஜகவின் பிரகாஷ் ஜவடேகர்

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close