கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2018 முடிவுகள்: தலைவர்களின் ரியாக்ஷன்ஸ்!

Karnataka Assembly Election Results 2018: பாஜக 113 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது

 

இரவு 07.30 – தேர்தலின் போது, நடிகர் பிரகாஷ் ராஜ், மிகக் கடுமையாக பிரதமர் மோடியை எதிர்த்து வந்தார். இன்று காலை தேர்தல் முடிவுகள் வெளியான போது, பாஜக அதிக இடங்களில் முன்னிலையில் இருந்த போது, பிரகாஷ் ராஜ் உகாண்டாவிற்கு தப்பிவிட்டார் என்றெல்லாம் மீம்ஸ் போட்டு அவரை சமூக தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். இந்நிலையில், அவர் தற்போது ட்விட்டரில், தேர்தல் முடிவுகள் குறித்த தனது கருத்துகளை ட்வீட் செய்துள்ளார்.

இரவு 07.00 – கர்நாடக தேர்தல் 205 தொகுதி முடிவுகள்: பாஜக வெற்றி – 93, காங்கிரஸ் வெற்றி – 73, ம.ஐ.த – 37, மற்றவை – 2. இறுதி முடிவுகள் அறிவிக்கப்படாத 18 தொகுதிகளில் முன்னிலை: பாஜக – 11, காங். – 5, மற்றவை – 1

மாலை 06.40 – பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜகவின் வளர்ச்சி திட்டங்களுக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி. கர்நாடகாவில் பாஜகவை தனிப்பெரும் கட்சியாக உருவாக்கியதற்கு நன்றி. கர்நாடக சகோதர – சகோதரிகளுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

மாலை 06.00 – குமாரசாமி, சித்தராமையா மற்றும் காங்கிரஸ், ம.ஜ.த. கட்சி தலைவர்கள் ஆளுநருடன் கூட்டாக சந்தித்தனர். அப்போது பேசிய குமாரசாமி, “மஜத ஆட்சியமைக்க காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளது” என்றார்.

மாலை 05.50 –  ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் குமாரசாமி. இதன்பின் பேட்டியளித்த கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா, “ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் வழங்கியுள்ளோம். இனி ஆளுநர் கையில் தான் முடிவு உள்ளது” என்றார்.

மாலை 05.40 – ஆட்சியமைக்க யாரை வேண்டுமானாலும் அழைக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. தனிபெரும் கட்சியை கூட ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கலாம் – சட்ட நிபுணர் சுபாஷ்

மாலை 05.30 – ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் பாஜகவின் எடியூரப்பா.

மாலை 05.10 – வாக்கு சதவீதத்தில் முன்னணியில் இருக்கும் காங்கிரஸ்!

காங்கிரஸ் – 37.9% வாக்குகள் – 1,33,55,312
பாஜக – 36.2% வாக்குகள் – 1,27,44,325
மதசார்பற்ற ஜனதாதளம் -18.5% வாக்குகள் – 65,03,221
சுயேட்சை – 3.9% வாக்குகள் – 13,71,537

மாலை 04.30 – ஆட்சி அமைக்க உரிமை கோரி, கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்திக்க நேரம் கேட்டு மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி ஆளுநர் மாளிகைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், ஆட்சி அமைக்கக் கோரிய காங்கிரஸ் ஆதரவை ஏற்றுக் கொண்டுள்ளோம் எனவும் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

மாலை 04. 15 – கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆளுநரிடம் தனது ராஜினாமா முடிவை அளித்துள்ளார்.

மாலை 04.00 – பாஜகவின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “ஆட்சியமைக்கக் கோரும் தார்மீக உரிமையை காங்கிரஸ் இழந்துவிட்டது. சித்தராமையா தனது சொந்த தொகுதியிலேயே தோற்றுவிட்டார். காங்கிரஸின் தற்போதைய செயல்பாடுகளைக் கண்டிக்கிறோம். மக்கள் எங்களுக்குத் தான் முழு ஆதரவை அளித்துள்ளனர். ஆளுவோருக்கு எதிரான மனநிலையே, காங்கிரஸின் தோல்விக்கு காரணம். பின்வாசல் வழியாக, காங்கிரஸ் ஆட்சியை அமைக்க முயல்கிறது. கட்சித் தலைமையுடன் கலந்தாலோசித்து அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க உள்ளோம்” என்றார்.

பிற்பகல் 03.45 – கர்நாடகாவில் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்க உரிமை கோருவோம். கர்நாடகாவில் பாஜகவை ஆட்சி அமைக்க விட மாட்டோம் என மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி நிர்வாகி தானிஷ் அலி தெரிவித்துள்ளார்.

பிற்பகல் 02.50 – முதல்வர் சித்தராமையா உட்பட காங்கிரஸ் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சித்தராமையா, “மத சார்பாற்ற ஜனதா தளம் தலைமையில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கிறது. கட்சி மேலிடம் இதற்கான முடிவை எடுத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். இதனால், கர்நாடக தேர்தல் களத்தில் புதிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் ஆதரவை, மத சார்பாற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் தேவகவுடாவும், குமாரசாமியும் ஏற்றுக் கொண்டனர் என்று காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் அறிவித்துள்ளார்.

பகல் 01.00 – காங்கிரஸ் தோல்விக்கு மாநில தலைமையே காரணம்; மத்திய தலைமை அல்ல- கர்நாடக அமைச்சர் சிவகுமார் பகிரங்க குற்றச்சாட்டு

பகல் 12.55 – கர்நாடக தேர்தல் முடிவுகளையடுத்து, பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.

பகல் 12.15 – கர்நாடக தேர்தலில் பாஜகவின் வெற்றிக்காக பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு வாழ்த்து. கர்நாடகாவில் பாஜகவின் வெற்றிக்கு பிரதமர் மோடியின் செயல்பாடுகளே காரணம் – துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்.

பகல் 12.00 – மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி தனது ட்விட்டரில், “கர்நாடக தேர்தலில் வெற்றிப் பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். தோற்றவர்கள், மீண்டும் போராடுங்கள். காங்கிரஸ், ஜேடிஎஸ்ஸுடன் கூட்டணி வைத்திருந்தால், முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும். நிறைய மாறியிருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

 

காலை 11.45 – கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் எடியூரப்பாவுக்கு வாழ்த்து. புதிதாக பொறுபேற்கும் பாஜக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நீரை திறக்கவேண்டும் – மு.க.ஸ்டாலின்

காலை 11.38 –  மே.18 இல் எனது நண்பர் எடியூரப்பா கர்நாடக முதலமைச்சராக பதவியேற்பார் என நம்புகிறேன் – சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

காலை 11.30 – காங்கிரஸின் எதிர்மறை அரசியலை கர்நாடக மக்கள் நிராகரித்துள்ளனர். பிரதமரின் பரப்புரையே பாஜகவுக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை கொடுத்துள்ளது. வளர்ச்சியே நாட்டிற்கு முக்கியம் என்ற பிரதமரின் கருத்தை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

காலை 11.10 – தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், “பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இந்த வெற்றி சமர்ப்பணம். ஆட்சிக் கொண்டிருந்த மாநிலத்தையே காங்கிரஸ் இழக்கிறது என்றால், அவர்களால் வேறு எங்கேயும் வெற்றிப் பெற முடியாது. எல்லாவற்றிலும் காங்கிரஸ் பின்தங்கிவிட்டது. மதத்தை வைத்து பிரித்தாளும் சூழ்ச்சி செய்து காங்கிரஸ் ஆட்சி செய்தது. மக்கள் அதனை ஏற்கவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, கர்நாடக மக்களுக்கு இந்த வெற்றி சமர்ப்பணம்.

கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், அது கர்நாடகாவுக்கும் நல்லது; தமிழகத்திற்கும் நல்லது. காங்கிரஸ் ஆட்சியில், அவர்கள் தமிழகத்திற்கு முறையாக கிடைக்க வேண்டிய தண்ணீரைக் கூட தரவில்லை. பாஜக ஆட்சி அமைப்பதால், காவிரியில் தண்ணீர் நிச்சயம் கிடைக்கும்.

கர்நாடகத்தின் வெற்றி, தென்னகத்தில் பாஜக காலூன்றலின் வாசலாக இருக்கும் என் நானும் நம்புகிறேன். இந்த வெற்றி தென்னக மாநிலங்களில் தொடரும்.

தமிழக பாஜக தலைவர்கள், எடியூரப்பாவை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதோடு மட்டுமில்லாமல், காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமையை தரக் கோரி வலிமையாக வலியுறுத்துவோம்” என்றார்.

காலை 10.50 – தென்னிந்தியாவுக்குள் பாரதிய ஜனதா கட்சி கால் ஊன்றுவதற்கு கர்நாடக தேர்தல் தான் நுழைவுவாயில் – பாஜகவின் தலைவர் அமித் ஷா உறுதி

காலை 10.30 – பாஜகவின் மூத்த தலைவர் சதானந்தா கவுடா, “பாஜக 113 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதால் கூட்டணி என்ற கேள்விக்கே இடமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

காலை 10.00 – சரியான நிலவரம் என்பது தெரிய வர 11-11.30 ஆகலாம். மஜதவுடன் கூட்டணி அமைப்பது குறித்து குலாம் நபி ஆசாத் மற்றும் அசோக் ஹெக்லோட் ஆகியோரோடு ஆலோசிக்க உள்ளேன் என காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க – கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2018 முடிவுகள் LIVE UPDATES: அறுதிப் பெரும்பான்மைக்கும் அதிக தொகுதிகளில் பாஜக முன்னிலை

 

×Close
×Close