கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2018 முடிவுகள்: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் சாம்ராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்ட கன்னட சலுவாளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் படுதோல்வியடைந்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த 12-ம் தேதி 222 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காங்கிரஸ், பாஜக, மஜத உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள், சுயேச்சைகள் உட்பட 2622 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காங்கிரஸ், மஜத, இந்திய குடியரசு கட்சி, அதிமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் சார்பாக 30 தமிழர்களும் களமிறங்கினர். காங்கிரஸ் கட்சி 221, பாஜக 222, மஜத 199 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதின.
பிற்பகல் 03.20 மணி நிலரவப்படி, ஆளும் காங்கிரஸ் கட்சி 35 இடங்களிலும், பாஜக 67 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 14 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் சாம்ராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்ட கன்னட சலுவாளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் படுதோல்வி அடைந்துள்ளார். வெறும் 5,977 வாக்குகளை மட்டுமே பெற்று டெபாசிட்டை இழந்தார். காவிரி விவகாரத்தில் எப்போதும் தமிழர்களுக்கு எதிராகவும் தமிழகத்துக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர் வாட்டாள் நாகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.