224 தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் முக்கிய எதிர்கட்சிகளான பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகியவை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. கர்நாடக தேர்தல் களத்தில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் போட்டி போட்டுக் கொண்டு சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, இருவரும் மாறி மாறி ஒருவருக்கொருவர் விமர்சித்தும் வருகின்றனர்.
முன்னதாக, 'நான் 15 நிமிடங்கள் பேசினால் மோடி ஓடி விடுவார்' என்று ராகுல் காந்தி கூற, அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, 'கர்நாடாகாவில் காங்கிரஸ் செய்த வளர்ச்சி திட்டங்கள் குறித்து 15 நிமிடங்கள் பேப்பர் இல்லாமல் ராகுல் காந்தி பேச தயாரா?. இந்தி, ஆங்கிலம் அல்லது அவரது தாய் மொழியில் கூட ராகுல் 15 நிமிடம் பேசலாம். ராகுல் பேச மட்டும்தான் செய்வார், ஆனால் நாங்கள் தான் வேலைக்காரர்கள்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், ராகுல் காந்தியில் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், "மோடி அவர்களே, நீங்கள் நிறைய பேசுகிறீர்கள். பிரச்சனை என்னவென்றால், நீங்கள் பேசுவதும், உங்கள் செயல்பாடும் ஒத்துப் போவதில்லை. தேர்தலுக்காக நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள வேட்பாளர்கள் 'கர்நாடகாவில் அதிகம் தேடப்படும் நபர்கள்' லிஸ்டில் இருக்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், 'கர்நாடகாவில் உங்கள் கட்சியைச் சேர்ந்த 11 தலைவர்களின் ஊழல் வழக்குகள் பற்றி ஐந்து நிமிடம் உங்களால் பேச முடியுமா?' என்று கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, அவர்கள் அனைவரையும் அந்த வீடியோவில் பட்டியலிட்டுள்ளார்.
அதேசமயம், பிரதமர் மோடியும் காரசாரமாக காங்கிரஸ் கட்சியை வறுத்தெடுத்து வருகிறார். கர்நாடகாவில் இன்று தனது மூன்றாவது கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மோடி, "இந்திரா காந்தி காலத்தில் இருந்தே, ஏழை மக்களை முட்டாளாக்கி வெற்றிப் பெறுவதையே காங்கிரஸ் வழக்கமாக கொண்டிருக்கிறத. இப்போதும் பொய் மேல் பொய் பேசியே பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களுக்கு விவசாயிகள் மீதும், ஏழை மக்களின் மீதும் என்றுமே அக்கறை இருந்தது இல்லை. உருளைக்கிழங்கில் இருந்து தங்கம் எடுக்க முடியும் என நினைப்பவர்கள் தான் இன்று விவசாயிகள் குறித்து அல்லும், பகலும் பேசி வருகின்றனர். கர்நாடகாவில் இதுவரை ஆட்சி செய்த எந்த காங்கிரஸ் அரசாவது தண்ணீர் பிரச்னையை தீர்த்துள்ளதா? கருப்பு பணத்தை நிரப்புவதில் தான் காங்கிரஸ் கட்சி குறியாக உள்ளது.
கர்நாடகாவின் சிறப்பான எதிர்காலத்திற்காக காங்கிரஸ் தண்டிக்கப்பட வேண்டும். 'C' என்பதற்கு காங்கிரஸ் என்றும் அர்த்தம் கொள்ளலாம். கரப்ஷன் என்றும் அர்த்தம் கொள்ளலாம்" என பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.