கர்நாடகாவில் ரூ.8,165 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி... முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

கர்நாடக மாநிலத்தில் ரூ.8,165 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அளிவித்துள்ளார்.

கர்நாடாக சட்டமன்ற கூட்டத்தொடரில் கார்நாடக மாநிலத்தில் நிலவிவரும் வறட்சி குறித்து விவாதிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துவந்தனர். மேலும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துவந்தனர்.

இந்நிலையில், சட்டமன்றத்தில் முதலமைச்சர் சித்தராமையா பேசும்போது, ஜூன் 20-ம் தேதி வரையில் கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை விவசாயக் கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார்.

இதன் மூலம் 22 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என கருதப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளாக கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் திணறி வந்தனர். இந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கு மாநில அரசுக்கு தங்கள் கொடுத்த அழுத்தம் தான் காரணம் என அம்மாநில பாஜக உரிமை கொண்டாடுகிறது. தாங்கள் நடத்திய தொடர் பிரச்சாரத்தின் காரணமாகவே விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என பாஜக தெரிவித்துள்ளது.

சட்டமன்றத்தில் முதலமைச்சர் சித்தராமையா மேலும் பேசும்போது: கூட்டுறவு வங்கிகளில் ரூ.8,167 கோடி வரை விவசாயக் கடனை மாநில அரசு தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விவசாயக்கடனை பாஜக நினைத்தால் தள்ளுபடி செய்ய முடியும். எனவே மத்திய அரசிடம் மாநில பாஜக இது குறித்து கூறி மீதமுள்ள விவசாயக் கடனை தள்ளுபடி செய்து காட்டுங்கள் என்று சவால் விடுத்துள்ளார்.

மேலும், தேசிய மயமாக்கப்பட்டுள்ள வங்கிகளில் உள்ள விவசாயிகளின் கடனை பிரதமர் நரேந்திர மோடி தள்ளுபடி செய்திட வேண்டும் என சித்தராமையா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

×Close
×Close