மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது இந்திராணி மற்றும் பீட்டர் முகர்ஜியின் "ஐஎன்எக்ஸ் மீடியா" நிறுவனத்திற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்று பெற்றுத் தருவதற்காக மொரிஷியஸில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக அவரது வீடு உள்ளிட்ட 17 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டவர்களின் மீது வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் தேவையான ஆவணங்களுடன் நேரில் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால் விசாரணைக்கு ஆஜராகாத கார்த்தி சிதம்பரம், அந்த சம்மனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இதனிடையே, கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விடக்கூடாது என்பதற்காக (அவரை தேடப்படும் நபராக அறிவித்து) அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸை, சிபிஐ அறிவுறுத்தலின் பேரில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் குடியுரிமை அலுவலகம் பிறப்பித்தது. இதை எதிர்த்து கார்த்திக் சிதம்பரம் நீதிமன்றம் சென்றார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அந்த லுக் அவுட் நோடீசுக்கு தடை விதித்தது.
சென்னை நீதிமன்றத்தின் இந்த தடையை எதிர்த்து சிபிஐ உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், கார்த்திக் சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீஸ் தடைக்கு மறுப்பு தெரிவித்ததுடன் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. மேலும், டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கமாறும் கார்த்திக் சிதம்பரத்திற்கு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த 23-ஆம் தேதி டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராகி கார்த்திக் சிதம்பரம் விளக்கமளித்தார். இந்த விசாரணை சுமார் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இந்த விசாரணையின்போது நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. கார்த்திக் சிதம்பரம் நடத்திவரும் தொழிலுக்கு எவ்வாறு கட்டணம் பெறப்படுகிறது, மறைமுகமாக ஏதேனும் தொழில் நடத்துகிறாரா என்பது குறித்த தகவல்களை சிபிஐ கேட்டறிந்தது.
இந்த நிலையில், இன்று மீண்டும் இரண்டாவது முறையாக டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் கார்த்திக் சிதம்பரம் ஆஜராகியுள்ளார். தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.