ஐம்மு காஷ்மீரில் உள்ள இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த வீரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இரண்டு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் இந்த மோசமான தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இது குறித்து தகவல் தெரிவிப்பதாவது, இன்று காலை சுமார் 8:30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவமானது, இந்திய எல்லையை குறிவைத்து தாக்கியுள்ளது. கிருஷ்ணகாதியில் உள்ள கெர்னி பகுதியில் நடத்தப்பட்ட இந்த சம்பவத்தின்போது, பாகிஸ்தான் ராணுவம் ராக்கெட் உள்ளிட்டவைகளை கொண்டு அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் நடத்தியுள்ள இந்த திடீர் தாக்குதலால், இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் 2-பேர் வீர மரணம் அடைந்தனர். இதனையடுத்து, இந்திய பாதுகாப்பு படை வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர்.
கெர்னி பகுதியானது தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவும் பகுதியாக கருதப்படுகிறது. அங்கு தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும், அவர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவும் நோக்கில், தக்க சமயத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த மாதத்தில் தீவிரவாதிகள் பலமுறை இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சி மேற்கொண்டனர். தெக்வார் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பத்தின் போது ராணுவ அதிகாரி ஒருவர் வீர மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதல் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மணிஷ் மேத்தா கூறியதாவது, இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மற்ற பாதுகாப்பு படை வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று தெரிவித்தார்.