தேசிய அளவில் ஒன்று சேரும் புதிய கூட்டணி! பாஜக, காங்கிரசுக்கு மாற்று அணி!

புதிய அணியை ஏற்படுத்துவது தொடர்பாக, சந்திரசேகர ராவ், மம்தா பானர்ஜியை இன்று நேரில் சந்தித்து பேசினார்

மத்தியில் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக தேசிய அளவில் புதிய அணியை ஏற்படுத்துவது குறித்து, தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை இன்று நேரில் சந்தித்து பேசினார்.

நாட்டில் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக புதிய அணி அமைக்க வேண்டும் என தெலங்கானா முதல்வர் தொடர்ந்து சந்திரசேகர ராவ் வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக, பல்வேறு கட்சித் தலைவர்களை தொடர்புகொண்டு பேசியும் வருகிறார். அதன் ஒரு பகுதியாக, கடந்த 4-ஆம் தேதி, மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை, சந்திரசேகர ராவ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, மாற்று அணி அமைக்கும் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பதாக மம்தா பானர்ஜி உறுதி அளித்தார். இந்த நிலையில், இன்று கொல்கத்தாவில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு சென்ற சந்திரசேகர ராவ், முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். அப்போது, பாஜக, காங்கிரஸிற்கு மாற்றாக புதிய அணியை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பிற்கு பின்னர் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய மம்தா பானர்ஜி, இது ஒரு நல்லத் தொடக்கம் என்றார். நாட்டின் முன்னேற்றம் குறித்து தாங்கள் விவாதித்ததாகக் கூறிய மம்தா பானர்ஜி, பாஜக, காங்கிரசுக்கு மாற்றாக தேசிய அளவில் புதிய அணி அமைக்கும் முயற்சிக்கு ஆதரவு பெருகும் என நம்புவதாகக் கூறினார்.

இதைத் தொடர்ந்து பேசிய சந்திரசேகர ராவ், ‘நாட்டில் மாற்று அணி அமைப்பதற்கான தேவை ஏற்பட்டுள்ளது.  2019ம் நாடாளுமன்ற தேர்தலுக்குள்ளாக அதனை ஏற்படுத்த வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். புதிதாக அமைய உள்ள அணி, சில கட்சிகளின் கூட்டணி என்ற அளவில் நின்றுவிடாது. மக்களுக்காக அமைக்கப்படும் இந்த மாற்று அணி கூட்டுத் தலைமையை கொண்டதாகவும் கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்துவதாகவும் அமையும்’ என்று தெரிவித்தார். மேலும், ஒருவேளை புதிய கூட்டணி வென்றால், யார் முதல்வராவது? என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில், மமதா பானர்ஜியின் பெயரும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பெயரும் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் திமுக, அதிமுகவிற்கு மாற்றாக உருவாகிய ‘மக்கள் நலக் கூட்டணி’ போன்று தேசிய அளவில் பாஜக, காங்கிரசுக்கு மாற்றாக புதிய அணி உருவாக உள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close