இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் மலையாள இணைய செய்தித் தளத்தின் செல்போன் அப்ளிகேஷனை ieMalayalam கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும நிறுவனர் ஸ்ரீ ராம்நாத் கோயன்காவின் இதழியலின் தையரியம், உண்மையின் தேடல் என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும், “தி இந்தியன் எக்ஸ்பிரஸ்” இந்தியாவின் மிகவும் நம்பகமான செய்தி நிறுவனமாகும். இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய இணையதள செய்தி நிறுவனமான இந்நிறுவனம், உலகம் முழுவதும் 75 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.
மாகாண மொழிகளில் செய்திகளை வழங்கும் பொருட்டு, யாரும் பார்க்காத கோணத்தில், சாமானிய மக்களின் குரலாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதள செய்தித் தளமான, “இந்தியன் எக்ஸ்பிரஸ் மலையாளம்” கடந்த ஜனவரி மாதத்திலும், “இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்” கடந்த ஏப்ரல் மாதத்திலும் தொடங்கப்பட்டது. ஏற்கனவே, மாராத்தி மொழியில் லோக்சத்தா, ஹிந்தி மொழியில் ஜனசத்தா ஆகிய இணையதள செய்தித் தளத்தை நமது நிறுவனம் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் மலையாள இணைய செய்தித் தளத்தின் செல்போன் அப்ளிகேஷனை ieMalayalam கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி சிறப்புரையாற்றினார். அத்துடன், [email protected] என்ற அம்மாநிலத்தின் முக்கியஸ்தர்களுடன் நடத்தப்பட்ட 60 நேர்காணல் வீடியோக்களையும் முதல்வர் பினராயி தொடங்கி வைத்தார். கேரள முன்னாள் முதல்வர்கள் அச்சுதானந்தம், உம்மன் சாண்டி, நடிகர் மோகன்லால், பாடகி கே.எஸ்.சித்ரா உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களுடன் இந்த நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது.
ieMalayalam app-யை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய முதல்வர் பினராயி விஜயன், ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்பதைஊடகங்கள் நினைவில் கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் பேசிய அவர், வணிக ரீதியான கருத்துகளை தாண்டி, உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும். வணிக நலன்களை கடந்து சிந்திப்பது எப்போதும் சாத்தியம் இல்லை என்றாலும், சமநிலைக்கு முயற்சிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
வரவேற்புரையாற்றிய இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் கோயன்கா, ieMalayalam app-யை தொடங்கி வைக்க கேரள முதல்வரை விட சிறந்த நபர் இருக்க முடியாது என புகழாரம் சூடினார். கேரளாவின் கலாச்சார பரிமாற்றம் மற்றும் கருத்துகள் சங்கமிப்பை நாம் இங்கே கொண்டாடி வருகிறோம். சமூக பார்வையாளர்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் டிஜிட்டல் தயாரிப்பு தான் ieMalayalam app என குறிப்பிட்ட ஆனந்த் கோயன்கா, கேரள மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அத்துடன், நடுநிலை தன்மை மாறாமல், குரலற்றவர்களுக்கு குரலாக, அச்சமின்றி அதிகாரத்திடம் உண்மையை பேசுவோம் எனவும் ஆனந்த் கோயன்கா அப்போது உறுதியளித்தார்.