மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசின் தடையை எதிர்த்து கேரள சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இறைச்சிக்காக சந்தைகளில் கால்நடைகளை விற்பதற்கு மத்திய அரசு சமீபத்தில் தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்த விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசின் தடை அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே கேரளாவில் ஆளும் கட்சி மற்றும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மத்திய அரசின் இந்த முடிவிற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மாட்டிறைச்சி விவகாரத்தில் புதிய உத்தரவிட்டது. அதில் மத்திய அரசின் இந்த தடைக்கு நான்கு வார காலம் இடைக்கால தடை விதித்து உத்தவிட்டது. இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் நான்கு வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தவிட்டிருந்தது.
இதேபோல, மாட்டிறைச்சி விவகாரத்தில் கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் அறிவிப்பை முழுமையாக படித்திருந்தால், போராட்டம் நடத்துவதற்கான அவசியமே ஏற்பட்டிருக்காது. கல்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்வது குறித்த மத்திய அரசின் அறிவிப்பு மனித உரிமைகளை எந்த வகையிலும் மீறவில்லை என்று கூறியது. மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அறிவிப்புக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.
இந்த நிலையில், இன்று கேரள சட்டமன்றம் இன்று கூடியது. அப்போது, இறைச்சிகாக மாடுகள் விற்கப்படுவதை மத்திய அரசு தடை செய்ததற்கு எதிராக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கொண்டு வந்தார். மத்திய அரசின் இந்த தடை மாநில சுயாட்சிக்கு எதிரான வகையில் அமைந்துள்ளது. எனவே இறைச்சிக்காக மாடுகளை விற்க விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளிடோர் ஆதரவு அளித்தனர். கேரள சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு பாஜக எம்எல்ஏ மட்டும் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். இதையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.