மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணையில் மாட்டிறைச்சிக்கு முழுமையான தடை விதிக்கப்படவில்லை என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கால்நடைகளை இறைச்சிக்காக விற்பதற்கும், வாங்குவதற்கும் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. மேலும், சந்தைகளில் கால்நடைகளில் வாங்கியவர்கள் அவைகளை இறைச்சிக்காக பலியிடக் கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவிக்கையின் மூலம் வெளியிட்டது.
இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசின் இந்த உத்தரவிற்கு கேரளாவில் ஆளும் கட்சி, எதிர்கட்சிகள் போராட்டத்தில் குதித்தனர்.
இதனிடையே சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 30ம் தேதி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மத்திய அரசின் உத்தரவுக்கு நான்கு வாரங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேலும், நான்கு வாரங்களுக்குள் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், மத்திய அரசின் ஆணைக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, மத்திய அரசு வெளியிட்ட புதிய விதிமுறைகளில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படவில்லை என்று தெரிவித்தது.
மேலும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை மத்திய அரசின் ஆணைக்கு இடைக்கால தடை விதித்தது ஆச்சரியமளிக்கிறது என்றும், மத்திய அரசின் அறிவிப்பானையை முறையாக படித்திருந்தால் போராட்டம் நடத்துவதற்கான தேவையே இருந்திருக்காது எனவும் கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2017/05/kerala-high-court-1.jpg)
இது தொடர்பாக கேரள உயர்நிதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது:
மத்திய அரசியின் அறிவிப்பில், கால்நடைகளை இறைச்சிக்காக சந்தைகளில் மட்டுமே விற்பனை செய்யக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறைச்சிக்காக கால்நடைகளை விற்பனை செய்ய முற்றிலும் தடைவிதிக்கப்படவில்லை. வீட்டிலோ அல்லது மற்ற இடங்களில் வைத்தோ கால்நடைகளை விற்க முடியாதா?. இந்த அறிவிப்பு மக்களின் உரிமைகளை எந்த விதத்திலும் மீறவில்லை. மத்திய அரசின் அறிவிப்பை முழுமையாக படிக்காமலேயே அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல தெரிகிறது. மத்திய அரசின் அறிவிப்பாணையை முழுமையாக படித்திருந்தால், போராட்டம் நடத்துவதற்கான தேவையே இருந்திருக்காது.