/tamil-ie/media/media_files/uploads/2017/09/mustafa-lottery-1.jpg)
கேரள மாநில அரசால் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியான சிறப்பு லாட்டரி குலுக்கலில், 10 கோடி ரூபாய் பணத்தை லோடு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வென்றார்.
கேரளாவில் பண்டிகை காலங்களில் சிறப்பு லாட்டரி குலுக்கல் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருவோணம் பம்பர் 2017 என்ற பெயரில் கேரள லாட்டரி துறை சிறப்பு லாட்டரி குலுக்கலை அறிவித்தது. இதில், குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு 10 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்றது. பல்வேறு ஏஜெண்ட் நிறுவனங்கள் மூலம் 65 லட்சம் லாட்டரி சீட்டுகள் இந்தாண்டு விற்பனையாகின.
இந்நிலையில், இந்த குலுக்கலில் வெற்றிபெற்றவரின் பெயரை திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்ரா ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்தார். AJ442876 என்ற லாட்டரி எண்ணின் உரிமையாளர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன்படி, AJ442876 என்ற லாட்டரி எண்ணுக்கு உரிமையானவர் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முஸ்தஃபா என்பது தெரியவந்தது. இவரது தந்தை தேங்காய் வியாபாரி. அந்த தேங்காய்களை லோடு ஆட்டோவில் ஏற்றி கடைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் பணியை முஸ்தஃபா செய்து வருகிறார்.
தான் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்டு 10 கோடி ரூபாய்க்கு அதிபராகி விட்டோம் என்பது வெள்ளிக்கிழமை வரை முஸ்தஃபாவுக்கு தெரியவில்லை. அதன்பின்பே, அவருக்கு இந்த செய்தி தெரியவந்தது. குலுக்கலில் தனக்கு கிடைத்திருக்கும் பணத்தின் மூலம் தான் கடனை அடைக்க உள்ளதாகவும், வீட்டை புதுப்பிக்க உள்ளதாகவும் முஸ்தஃபா தெரிவித்தார்.
10 கோடி ரூபாய் பரிசுத்தொகையில், லாட்டரி வாங்கப்பட்ட ஏஜெண்டுக்கு கொடுக்க வேண்டிய பணம் மற்றும் வரித்தொகை பிடித்தம் போக, முஸ்தஃபாவுக்கு 6.3 கோடி ரூபாய் கிடைக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.