கல்வித்திறன் அடிப்படையில் மாணவர்களுக்கு இருவேறு சீருடைகளை வழங்கிய பள்ளி

கேரள மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு ஒரு நிறத்திலும், சுமாரான மாணவர்களுக்கு வேறொரு நிறத்திலும் சீருடைகள் வழங்கப்பட்டது.

கேரள மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு ஒரு நிறத்திலும், படிப்பில் மந்தமான மாணவர்களுக்கு வேறொரு நிறத்திலும் சீருடைகள் வழங்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பண்டிக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஆங்கில பள்ளியான அல் ஃபரூக் மேல்நிலைப் பள்ளியில் இச்சம்பவம் நடைபெற்றது. இதில், சுமார் 900 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில், நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு வெள்ளை நிறத்திலான சீருடையும், படிப்பில் சுமாரான மாணவர்களுக்கு சிகப்பு கோடுகள் கொண்ட சீருடையும் இந்த கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

மாணவர்களின் கல்வித்திறனை சீருடை மூலம் வேறுபடுத்தினால், கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவர் எனவும், இந்த நடைமுறை மாணவர்களிடையே பாகுபாட்டை உருவாக்கும் எனவும், கல்வியாளர்கள் மத்தியிலும், மாணவர்களின் பெற்றோர் மத்தியிலும் விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில், இவ்வாறு வெவ்வேறு சீருடைகள் வழங்கினால் மாணவர்களுக்கு ஆரோக்கியமான போட்டி மனநிலைமை உருவாகி, கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் முன்னேற முனைவார்கள் என பள்ளி நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து, மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் மாநில சமூக நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் குழந்தைகள் மையத்திடம் புகார் தெரிவித்தனர். அந்த மையம் இம்முறை மாணவர்களிடையே பாகுபாட்டை உருவாக்கும் என கூறுகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் பள்ளி முதல்வரிடம் விசாரணை மேற்கொண்டபோது, இந்த நடைமுறை மாணவர்களிடையே ஆரோக்கியமான போட்டி மனநிலையை வளர்த்து அவர்கள் கல்வியில் முன்னேற உதவி புரியும் என விளக்கமளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், பள்ளி முதல்வர் மாணவர்களின் மனநலனில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் கவலை கொள்ளவில்லை எனவும் அதிகாரிகள் கூறினர்.

மாவட்ட கல்வித்துறை அதிகாரியை இதுகுறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மாநில கல்வித்துறை உத்தரவிட்டது.

இதனிடையே, சர்ச்சைகள் காரணமாக இந்த புதிய நடைமுறையை கைவிடப்போவதாகவும், பள்ளி முதல்வருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியது.

×Close
×Close