தாஜ்மஹாலை புகழ்ந்து கேரள சுற்றுத்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தியாவின் கலாச்சாரத்தை வெளிநாட்டவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ள தாஜ்மஹாலை, சுற்றுலா தலங்கள் பட்டியலிலிருந்து நீக்கி அறிவித்தது, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு. இது மதரீதியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன.
இந்த சர்ச்சை அடங்குவதற்குள், அம்மாநில பாஜக எம்.எல்.ஏ. சங்கீத் சோம், தாஜ்மஹாலுக்கு எதிராகவும், முகாலய மன்னர்களுக்கு எதிராகவும் சமீபத்தில் கூறிய கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. ”தாஜ்மஹால் துரோகிகளால் கட்டப்பட்டது, இந்திய கலாச்சாரத்தின் மீது படிந்த கறை”, என சங்கீத் சோம் கூறியிருந்தார். சங்கீத் சோமின் கருத்தால் பெரும் சர்ச்சை வெடித்த நிலையில், "தாஜ்மஹால் இந்திய தொழிலாளர்களின் வியர்வை மற்றும் ரத்தத்தால் கட்டப்பட்டது”, என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறினார். மேலும், அக்டோபர் 26 அன்று தாஜ்மஹாலை பார்வையிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், கேரள சுற்றுலா துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தாஜ்மஹாலை புகழ்ந்து கருத்து பதிவிடப்பட்டிருந்தது. அதில், ”இந்தியா குறித்து அறிந்துகொள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் தாஜ்மஹாலுக்கு வணக்கம்”, என குறிப்பிடப்பட்டிருந்தது.
கேரள சுற்றுலா துறையின் இந்த கருத்து, பாஜக ஆட்சிபுரியும் உத்தரபிரதேச அரசின் நடவடிக்கைகளுக்கு பதிலடியாக அமைந்துள்ளது.
கேரள சுற்றுலா துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ட்வீட்.
இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.