கேரளாவில் நடைபெற்ற வெங்கரா தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி உறுப்பினர் அமோக வெற்றியடைந்தார். பாஜக கடும் தோல்வியடைந்து நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வெங்கரா சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த பி.கே.குஞ்சாணிக்குட்டி ராஜினாமா செய்ததால், அத்தொகுதிக்கு கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி, சி.பி,எம், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் களமிறங்கினர். இத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், காங்கிரஸ் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளரான கே.என்.ஏ.காதர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.பி.எம். கட்சி வேட்பாளரைவிட 23,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தார். அவரது மொத்த வாக்குகள் 65,227. மூன்றாவது இடத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி பிடித்தது. மத்தியில் ஆளும் பாஜகவால், இந்த இடைத்தேர்தலில் நான்காம் இடத்தையே பிடிக்க முடிந்தது.
2008-ஆம் ஆண்டு வெங்கரா தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து, கேரளாவை ஆளும் சி.பி.எம். கட்சி, ஒருமுறை கூட அங்கு வெற்றிபெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
”வெங்கரா தொகுதியில் யாரும் இவ்வளவு பெரும்பான்மை வாக்குகளை பெற்றதில்லை. இந்த வெற்றி, காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக்கை யாராலும் தோற்கடிக்க முடியாது என்பதற்கான அடையாளம் என”, அத்தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி.கே.குஞ்சாணிக்குட்டி தெரிவித்தார்.
சமீபத்தில் மஹராஷ்டிரா மாநிலம் நாண்டட்-வகாலா மாநகராட்சி தேர்தலிலும் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.