‘புளூ வேல் சேலஞ்ச்’ இணைய விளையாட்டில் வெற்றிபெற தற்கொலை செய்த 16 வயது சிறுவன்

திருவனந்தபுரத்தில், 16 வயது சிறுவன் ‘புளூ வேல் சேலஞ்ச்’ எனப்படும் இணைய விளையாட்டில் வெற்றி பெறுவதற்காக தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

By: August 16, 2017, 1:16:51 PM

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், 16 வயது சிறுவன் ‘புளூ வேல் சேலஞ்ச்’ எனப்படும் இணைய விளையாட்டில் வெற்றி பெறுவதற்காக தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக, அவரது பெற்றோர் புகார் தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருவனந்தபுரத்தை சேர்ந்த மனோஜ் (வயது 16) கடந்த ஜூலை மாதம் 26-ஆம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆரம்பத்தில், உறவு சிக்கல்களால் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பெற்றோர் சந்தேகித்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, தன் மகன் ‘புளூ வேல் சேலஞ்ச்’ விளையாட்டின் தாக்கத்தால் தற்கொலை செய்திருக்கலாம் என அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது சம்பந்தமாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

’தி ப்ளூ வேல்’- ஸ்னாப் சாட், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் இந்த விளையாட்டை விளையாட முடியும் என தெரிகிறது. இந்த விளையாட்டை நிர்வகிப்பவர்கள், அதில் பங்கேற்பவர்களுக்கு தினமும் ஒரு சவாலை தருவார்கள். அதனை போட்டியாளர்கள் செய்து முடித்து, அதன் புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும். ஆரம்பத்தில் சாதாரண சவால்களே போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும். உதாரணமாக ஒருவகை இசையை கேட்க வேண்டும். அவர்கள் சொல்லும் நேரங்களில் தனியே நடக்க வேண்டும் குறிப்பாக நள்ளிரவு நேரங்களில். திகில் திரைப்படங்களை காண வேண்டும் என்பது போன்ற சவால்கள் கொடுக்கப்படும்.

அதன் பின், உயிருக்கே ஆபத்தான சவால்களை போட்டியாளர்கள் நிறைவேற்ற வேண்டும். தனது கைகள் உள்ளிட்ட உடற்பாகங்களில் குறிப்பிட்ட வடிவங்களை கத்தியால் கிழித்து வரைந்துகொள்ள வேண்டும். அதன்பின், 50-வது நாளில் அவர்கள் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற சவால் தரப்படும்.

ஒருவேளை அந்த சவாலை போட்டியாளர்கள் நிறைவேற்றாவிட்டால், ஏற்கனவே போட்டியாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை வைத்து அவருடைய குடும்பத்திற்கு தீங்கு விளைவிப்பதாக அந்த விளையாட்டு எச்சரிக்கும் என கூறப்படுகிறது.

இந்த விளையாட்டு, ரஷ்யாவிலிருந்து தொடங்கப்பட்டதாக தெரிகிறது. இதனால், பல நாடுகளில் 150 பேர் இந்த விளையாட்டால் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் மும்பையை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவர் 5-வது மாடியிலிருந்து குதித்து, இந்த விளையாட்டால் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,கடந்த 11-ஆம் தேதி மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம் உத்தரவு ஒன்றை வெளியிட்டது. அதில், சிறுவர்களை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டும் அபாயகரமான புளூ வேல் இணையதள விளையாட்டு தொடர்பான இணையத் தொடர்பை (லிங்க்) நீக்கு விடுமாறு, கூகுள், முகநூல், மைக்ரோசாஃப்ட், யாஹூ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Kerala woman says blue whale killed son police probe claim

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X