வயதான தாயை சாப்பாடு இல்லாமல் அறையில் பூட்டி வைத்துவிட்டு 'சுற்றுலா' சென்ற 'தங்கமகன்'!

தாயை பார்க்க சகோதரனின் வீட்டிற்கு வந்த போது வீடு பூட்டப்பட்டு இருந்திருக்கிறது. ஆனால், பாத்ரூமில் இருந்து சத்தம் வரவே, அதிர்ச்சியடைந்த ஜெய்ஸ்ரீ....

96 வயதான பெற்ற தாயை, சாப்பாடு இல்லாமல் மூன்று நாட்களுக்கு அறையில் பூட்டி வைத்துவிட்டு அந்தமானுக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார் மகன் ஒருவர். அந்த மூதாட்டி அவரது மகள் மூலம் தற்போது மீட்கப்பட்டுள்ளார்.

கொல்கத்தாவின் அனந்த்பூர் பகுதியைச் சேர்ந்த 96-வயதான மூதாட்டி சபிதா நாத், தனது மகன் விகாஷுடன் வசித்து வருகிறார். விகாஷ் தனது தாயை கடந்த புதனன்று இரவு வீட்டில் உள்ள அறையில் வைத்து பூட்டிவிட்டு, அன்றைய இரவே அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டார். இதனால், சாப்பாடு இல்லாமல் மூன்று நாட்களுக்கு அந்த மூதாட்டி அவதிப்பட்டு இருக்கிறார். இரண்டு முறை வாந்தியும் எடுத்திருக்கிறார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கொல்கத்தாவின் பராக்போர் பகுதியில் வசித்துவரும் மூதாட்டியின் மகளான ஜெய்ஸ்ரீ காயல், கடந்த ஞாயிறன்று தனது தாயை பார்க்க சகோதரனின் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது வீடு பூட்டப்பட்டு இருந்திருக்கிறது. ஆனால், பாத்ரூமில் இருந்து சத்தம் வரவே, அதிர்ச்சியடைந்த ஜெய்ஸ்ரீ உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த மூதாட்டியை மீட்டனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “விகாஷ் அவரது தாயை ஒரு சிறிய அறையில் வைத்து பூட்டிவிட்டு, அந்தமானுக்கு சுற்றுலா சென்றுவிட்டார். பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டிக்கு ஐந்து மகள்கள் உள்ளனர். அதில் ஒருவர் இங்கு வந்த போது தான், இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தற்போது அவர் தாயை தன்னுடன் பராக்போருக்கு அழைத்துச் சென்றுவிட்டார்” என்றார். தனது சகோதரன் குறித்து ஜெய்ஸ்ரீ புகார் அளித்துள்ளார்.

பின், அந்த மூதாட்டியுடன் செய்தியாளர்கள் பேச முயன்ற போது, கண்ணீர் மல்க பேசிய அவர், “நான் இருமுறை வாந்தி எடுத்தேன். நான்கு நாட்களாக என்னை அறையில் வைத்து எனது மகன் பூட்டிவிட்டான். அந்தச் சாவியை வேலைக்காரியிடம் கொடுத்து, எனக்கு சாப்பாடு தருவதற்கு மட்டும் அறையை திறக்குமாறு சொல்லி சென்றுவிட்டான். ஆனால், மறுநாள் வேலைக்காரி வரவில்லை. இதனால் நான் மிகவும் சோர்ந்துவிட்டேன்” என்று மட்டும் அவர் கூறினார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close