கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா கொல்கத்தாவில் இன்று தொடங்கி, வரும் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில், 65 நாடுகளைச் சேர்ந்த 144 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. தொடக்கவிழாவில், கலந்து கொள்வதற்காக நடிகர் கமல்ஹாசன் சென்னையில் இருந்து இன்று(10.11.17) கொல்கத்தா புறப்பட்டுச் சென்றார். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் நடிகர் அமிதா பச்சன், நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டனர்.
நடிகர் கமல்ஹாசன் சமீப காலமாக அரசியல் கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார். ரஜினிகாந்த் அரசியலில் கால்பதிப்பது குறித்து கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில், சட்டென அரசியல் களத்திற்குள் புகுந்ததாக தெரிகிறது கமல்ஹாசன். ஆளும் அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்த அவர், அதன் பின்னர் வெளிப்படையாகவே அரசியல் ரீதியிலான கருத்துகளை தெரிவித்து வருகிறார். சமூக பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து குரல் எழுப்பியும் வருகிறார்.
அரசியல் கட்சி தொடங்கி விரைவில் அரசியல் களத்திற்கு புகுவார் என எதிர்பார்க்கப்பட்டது, அதனை அதை உறுதிப்படுத்தும் வகையில், கமல்ஹாசனும் பேசியிருக்கிறார். அரசியல் கட்சி தொடங்குவது ஒருபுறம் இருக்க, இன்னொரு புறம், மாநில முதல்வர்களைச் சந்தித்து வருகிறார் கமல்ஹாசன். முன்னதாக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்துப் பேசிய கமல்ஹாசன், பின்னர் தனது இல்லத்திற்கு வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்துப் பேசினார்.
திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக, மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவிற்குச் கமல்ஹாசன் இன்று சென்றிருந்தார். அப்போது, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்திப்பார் என்று சொல்லப்பட்டது. அதன்படி இன்று மாலை கமல்ஹாசன், மம்தா பானர்ஜியை சந்தித்துப் பேசினார்.
முன்னதாக கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது: மம்தா பானர்ஜினின் ரசிகன் நான். கொல்கத்தா நகரமும், இங்கு நடைபெறும் திரைப்பட விழாவும் எனக்கு பிடித்தமான அம்சமாகும். கொல்கத்தாவிற்கு தற்போது வந்துள்ளதற்கு எந்தவித அரசியல் காரணமும் இல்லை என்றார்.