/indian-express-tamil/media/media_files/2025/10/13/lalu-prasad-yadav-2025-10-13-15-37-57.jpg)
Lalu Prasad Yadav IRCTC scam Rabri Devi Tejashwi Yadav Delhi court
நிர்பய் தாக்கூர் எழுதியது
ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) ஊழல் வழக்கில், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் (RJD) தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் மீது ஊழல், கிரிமினல் சதி மற்றும் மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் இன்று (அக்டோபர் 13) டெல்லி நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.
அவரைப் போலவே, லாலுவின் மனைவி ராப்ரி தேவி மற்றும் மகன் தேஜஸ்வி யாதவ் மீதும் கிரிமினல் சதி மற்றும் மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த உத்தரவின் மூலம், இந்த வழக்கில் விரைவில் தினசரி விசாரணை தொடங்கவுள்ளது.
குற்றச்சாட்டை உறுதி செய்த நீதிமன்றம்
லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது நடந்ததாகக் கூறப்படும் இந்த வழக்கில், ரவுஸ் அவென்யூவில் உள்ள சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.
லாலு பிரசாத் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார், டெண்டர் செயல்முறையைத் தன் விருப்பப்படி மாற்றியமைத்து சதித் திட்டத்தில் ஈடுபட்டார் என்று நீதிமன்றம் கூறியது.
"நிலத்தின் மதிப்பு குறைவாக மதிப்பிடப்பட்டு, ராப்ரி தேவி மற்றும் லாலு பிரசாத் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இது பொதுக் கருவூலத்திற்கு இழப்பை ஏற்படுத்தியது... இந்த பரிமாற்றங்கள் குறைவான மதிப்பில் செய்யப்பட்ட விதம் குறித்து ஆரம்பக்கட்டத்திலேயே ஒரு தீவிர சந்தேகம் உள்ளது" என்று நீதிபதி விஷால் கோக்னே தெரிவித்தார்.
லாலு பிரசாத்திடம் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது, அவர், "நீங்கள் சதியில் ஈடுபட்டீர்கள், அரசு ஊழியராக உங்கள் பதவியைத் தவறாகப் பயன்படுத்தினீர்கள், டெண்டரில் செல்வாக்கு செலுத்திக் கையாண்டீர்கள், குறைந்த விலைக்கு நிலத்தைப் பெற சதி செய்தீர்கள்" என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்த லாலு பிரசாத், ராப்ரி தேவி, மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகிய மூவரும், தாங்கள் குற்றம் செய்யவில்லை (Pleaded Not Guilty) என்று நீதிமன்றத்தில் மறுத்தனர். இந்த வழக்கில் அக்டோபர் மாத இறுதியில் இருந்து தினசரி விசாரணை தொடங்க வாய்ப்புள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி ஊழல்
சிபிஐ-ஆல் (CBI) விசாரிக்கப்பட்டு வரும் இந்த ஊழல் வழக்கு, லாலு பிரசாத் 2004 முதல் 2009 வரை மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது நடந்தது.
ஹோட்டல் ஒப்பந்த முறைகேடு:
இந்திய ரயில்வேயின் கீழ் இயங்கும் ஐ.ஆர்.சி.டி.சி-க்குச் சொந்தமான ராஞ்சி மற்றும் பூரியில் இருந்த இரண்டு பங்களா ரயில்வே (BNR) ஹோட்டல்களின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு ஒப்பந்தங்களை, சுஜாதா ஹோட்டல்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக சி.பி.ஐ.யின் குற்றப்பத்திரிகை கூறுகிறது.
நிலமே லஞ்சம்: இந்த ஒப்பந்தத்தை அளிப்பதற்குப் பதிலாக, பாட்னாவில் உள்ள 358 டெசிமல் (சுமார் 3.5 ஏக்கர்) மதிப்புமிக்க நிலத்தை, லாலு பிரசாத் தன் குடும்ப உறுப்பினர்களுக்காகப் பெற்றார்.
சுமார் 1.5 கோடி ரூபாய் மட்டுமே மதிப்பிடப்பட்ட அந்த நிலம், டிலைட் மார்க்கெட்டிங் கம்பெனி (Delight Marketing Company) என்ற பினாமி நிறுவனம் மூலம் பெறப்பட்டது. பின்னர், 2010 முதல் 2014-க்குள் இந்த நிறுவனத்தின் உரிமை, படிப்படியாக ராப்ரி தேவி மற்றும் தேஜஸ்வி யாதவ் வசம் சென்றது என்றும் சி.பி.ஐ. குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த வழக்கு லாலு பிரசாத் குடும்பத்திற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இதற்கிடையில், ரயில்வேயில் வேலைக்கு நிலம் பெற்றதாகக் கூறப்படும் மற்றொரு ஊழல் வழக்கையும் சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.