மத்திய பிரதேச மாநிலத்தில், 3 வயது பெண் குழந்தை மற்றும் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை விட்டுவிட்டு, ஜெயின் சமூகத்தை சேர்ந்த தம்பதியினர் சனிக்கிழமை துறவறம் பூண்டனர்.
மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் சுமித் ரத்தோர் (வயது 35) மற்றும் அனாமிகா (வயது 34). இவர்களுக்கு மூன்று வயதில் இப்யா என்ற மகள் உள்ளார். ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்களான இவர்களது குடும்பம் அரசியல் மற்றும் தொழிலில் மிகுந்த செல்வாக்கு உள்ளவர்கள். இவர்களுக்கு 100 கோடிக்கும் மேல் சொத்துக்கள் உள்ளன.
இந்நிலையில், தம்பதிகள் இருவரும் துறவறம் செல்ல முடிவெடுத்தனர். இது அவர்களது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அனாமிகாவின் தந்தை நீமுச் மாவட்டத்தின் முன்னாள் பாஜக தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. தன் மகளின் இந்த முடிவு குறித்து பேசிய அவரது தந்தை அசோக் சாண்டில்யா, “அவர்களை சமாதானம் செய்ய முடியவில்லை. மதம் அழைக்கும்போது அவர்களை யாராலும் தடுக்க முடியாது. என் பேத்தியை நான் வளர்த்துக் கொள்வேன்”, என கூறியிருந்தார்.
அதேபோல், சுமித் ரத்தோரின் தந்தை ராஜேந்திர சிங் ரத்தோர், “இந்த முடிவை நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், இவ்வளவு விரைவில் நாங்கள் எதிர்பார்க்கவில்லை.”, என தெரிவித்திருந்தார். இவர் சிமெண்ட் தொழிலில் பெரும் செல்வந்தர் ஆவார்.
இந்நிலையில், சூரத்தில் இவர்கள் இருவரும் அகில் பாரதிய சதமார்கி சம்ப்ரதாய் எனும் ஜெயின் அமைப்பை சேர்ந்த சுதமார்கி ஜெயின் ஆச்சார்யா ராம்லால் மகராஜ் என்பவரிடம் சனிக்கிழமை காலையில் தீட்சை வாங்கிக் கொண்டனர். தீட்சை வாங்கும் நிகழ்வில் அகில் பாரதிய சதமார்கி சம்ப்ரதாய் அமைப்பை சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர். தீட்சை வாங்குவதற்கு முன்னர், தங்களது பெற்றோரிடம் தம்பதியினர் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டனர்.
இவர்களது மகள் இப்யா, 8 மாத குழந்தையாக இருக்கும்போதே துறவறம் செல்ல முடிவெடுத்து
இருவரும் தனித்தனியே வாழ்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அவர்களது துறவறத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றில், குழந்தையின் எதிர்காலத்துக்காக அத்தம்பதியினர் மேற்கொண்ட முடிவுகளை விரிவான அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு, காவல் துறைக்கு குஜராத் குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.