ஹவுரா -டெல்லி ரயிலில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட சம்பவம், இந்திய ரயில்களில் வழங்கப்படும் உணவுகளின் தரத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹவுரா - டெல்லி ரயிலில் பயணித்த பயணி ஒருவர், மொகாமா ரயில் நிலையம் வந்தவுடன் வெஜிடபிள் பிரியாணி வாங்கியுள்ளார். ஆனால், அவர் வாங்கிய உணவில் பல்லி இருந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.
உடனடியாக அந்த பயணி, உணவில் பல்லி இருந்ததாக பயணச்சீட்டு சோதனையாளரிடம் புகார் தெரிவித்தார். மேலும், இந்த புகார் குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிற்கும் ட்வீட் செய்தார்.
“இதில் மோசமான விஷயம் என்னவென்றால், நான் புகார் தெரிவித்து மிக தாமதமாகத்தான் எனக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டன. புகார் தெரிவித்து நான்கு மணிநேரம் எனக்கு மருத்துவ உதவி அளிக்கப்படவில்லை”, எனவும் அந்த பயணி தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து இரண்டு நாட்களில் விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் எனவும், ரயில்வே உயரதிகாரி தெரிவித்தார். அதன்பின்பு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரி கூறினார்.
அனைத்து பயணிகளின் உடல்நலமும் ரயில்வே துறைக்கு முக்கியம் என ரயில்வே உயரதிகாரி தெரிவித்தார்.
இந்நிலையில், புதன்கிழமை அந்த உணவை சமைத்தவரை இந்திய ரயில்வே பணியிலிருந்து நீக்கியதாக தகவல் வெளியானது.
இந்திய ரயில்வேயில் அசுத்தமான மற்றும் காலாவதியான உணவுப்பொருட்கள் வழங்கப்படுவதாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சி.ஏ.ஜி. அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், மனிதர்கள் உட்கொள்ளத் தகாத உணவுகள் ரயில்வேயில் வழங்கப்படுவதாகவும், உணவில் பூஞ்சைகள் இருப்பதாகவும், எலி மற்றும் கரப்பான்பூச்சிகளும் உணவுப்பொருட்களில் காணப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு சில நாட்களே ஆன நிலையில் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் பல்லி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.