இன்றும், நாளையும் நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக்கை தொழிற்சங்கம் நடத்துகிறது. இதனால் விலைவாசி உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.மிட்டல் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:
அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் லாரி மற்றும் வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்கள் கடந்த 4 மாதமாக 3 கோரிக்கைகளை வலியுறுத்தி , மத்திய சாலை போக்கு வரத்து அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த பயனும் இல்லை.
குறிப்பாக ஜிஎஸ்டி, டீசல் விலையை நாள்தோறும் மாற்றி வருவது மற்றும் ஊழல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தடுக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. எனவே மத்திய அரசுக்கு நெருக்கடியை அளிக்கும் வகையில் 2 நாள் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இதன்படி, நாடு முழுவதும் அக்டோபர் 9, 10 தேதிகளில் (இன்றும், நாளையும்) லாரிகள் ஓடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நிர்வாகி குல்தரன் சிங் அத்வால் கூறுகையில், ‘எங்களுடைய கோரிக்கைகளை ஏற்காமல் கால தாமதம் செய்யும் பட்சத்தில் விரைவில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை மேற்கொள்வதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை’ என்றார்.
இவர்கள் அறிவித்தபடி இன்று லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது. இதனால் தமிழகத்தில் நான்கு லட்சம் லாரிகள் ஓடாது என தொழிற்சங்கத் தலைவர்கள் கூறினர். தென் மாநிலங்கள் முழுவதும் சுமார் 30 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. வேலை நிறுத்தம் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு லாரிகள் வராது. இதே போல் தமிழகத்தில் இருந்தும் வெளி மாநிலங்களுக்கு லாரிகள் இயங்காது.
பால், குடிநீர், மருந்து, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லக்கூடிய லாரிகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. அவை ஓடும். லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டால், சரக்குகள் தேக்கம் அடையும். இதனால் தீபாவளி நெருங்கும் வேளையில் உணவுப்பொருட்கள், காய்கறிகள் விலை உயரும் அபாயம் இருக்கிறது.