மஹாராஷ்டிராவில் 300 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 33 பேர் பலியான சோகம்

மஹாராஷ்டிராவில் பேருந்து கவிழ்ந்து விபத்து... 33 பேர் பலி

மஹாராஷ்டிரா ராய்காட் மாவட்டத்தில் உள்ள அம்பனேலி மலைப்பகுதியில் பல்கலைக்கழக ஊழியர்கள், மாணவர்கள் சென்ற பஸ், மலையில் இருந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவாவில் உள்ள கொங்கன் கிரிஷி வித்யாபீத் வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மஹாபலீஸ்வர் பகுதிக்கு ஒரு தனியார் பஸ்ஸில் சுற்றுலாச் சென்றனர். அங்குப் பயணத்தை முடித்து கோவா திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, அம்பனேலி மலைப்பகுதியின் 300 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 33 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் கொடுமை என்னவெனில், இந்த விபத்து குறித்து மக்கள் யாருக்கும் எதுவுமே தெரியவில்லை. அடிப்பட்டவர்களில் ஒருவர் மெல்ல மேலே ஏறி வந்து கூச்சலிட்ட பின்னரே, மற்றவர்களுக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப்படையினர், மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால், கட்டுப்பாட்டை இழந்த பஸ் விபத்தில் சிக்கி இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவ்விபத்து குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில் , “மஹாராஷ்டிரா ராய்காட் மாவட்டத்தில் மலைப்பகுதியில் நடந்த விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். அதற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டரில், “மஹாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டத்தில் நடந்த விபத்து கொடுமையானது, அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. ஏராளமானோர் பலியாகியுள்ளனர். காங்கிரஸ் கட்சியினர் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், விபத்தில் பலியானவர்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் அறிவித்தது மஹாராஷ்டிரா அரசு. மேலும், காயம் அடைந்தவர்களின் மருத்துவ சிகிச்சை செலவையும் அரசே ஏற்றுக் கொண்டிருக்கிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close