விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மகாராஷ்டிர முதலமைச்சர்!

மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பயணம் மேற்கொண்ட ஹெலிகாப்டர் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மகாராஷ்டிரா முதலமைச்சர் பட்னாவிஸ் ஹெலிகாப்டர் மூலம் லத்தூர் என்ற பகுதிக்கு சென்றார். ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்தில் தரையிறங்க முற்படும்போது எதிர்பாராத விபத்து ஏற்பட்டது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இது தொடர்பாக தேவேந்திர பட்னாவிஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: நானும் எனது குழுவினரும் சென்ற ஹெலிகாப்டர் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இதில் எனக்கும், எனது குழுவினருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. நாங்கள் அனைவரும் நல்ல நிலையில் இருக்கிறோம். யாரும் இது குறித்து பயப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார்.

அந்த ஹெலிகாப்டரில் தேவேந்திர பட்னாவிஸ், அவரது குழு மற்றும் விமானிகள் 2 பேர் இருந்தனர். இந்நிலையில், ஹெலிக்காப்டர் புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள்ளாக தரையில் மோதி விபத்துக்குள்ளானது. “குறிப்பிட்ட நேரத்தில் ஹெலிகாப்டர் சரியான உயரத்தை அடையாததே விபத்து காரணம்” என அந்த குழுவில் இருந்த ஒருவர் கூறினார்.

இது சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார். மேலும், இந்த ஹெரிகாப்டர் புதிதான ஒன்று தான். இதை வாங்கி 6-7 வருடங்கள் தான் இருக்கும். நல்ல நிலையில் செயல்படும் ஹெலிக்காப்டர்களில் இதுவும் ஒன்று. நான் நலமுடன் இருக்கிறேன் என்பதை மீண்டும் ஒருமுறை உங்களிடம் கூறிக்கொள்கிறேன். யாரும் இது குறித்து கவலைப்பட வேண்டாம் என்று பட்னாவிஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குநரக அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஹெலிகாப்டர் பறக்க தொடங்கியதும், காற்று வீசும் திசையில் மாற்றம் ஏற்பட்டதை விமானி அறிந்திருக்கிறார். எனவே விமானி ஹெலிகாப்டரை தரையிறக்க முயற்சி செய்தார். தரையிறக்கும் போது அப்பகுதியில் இருந்த வயரில் ஹெலிகாப்டர் சிக்கியது. இதன் காரணமாக விபத்து நடக்க நேரிட்டது. இந்த விபத்தினால் ஹெலிகாப்டரில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் அதில் பயணித்த அனைவரும் காயமின்றி தப்பினர் என்று கூறினார்.

நாக்பூரில், கடந்த மே மாதம் தேவேந்திர பட்னாவிஸ் பயணம் மேற்கொள்ளவிருந்த ஹெலிக்காப்டரில் தொழிற்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக தேவேந்திர பட்னாவிஸ் நக்சலைட்டுகள் அச்சுருத்தல் நிறைந்த பகுதியில் பயணம் செய்ய நேரிட்டது என போலீஸார் தெரிவித்தனர்.

×Close
×Close