மகராஷ்டிரா மாநிலத்தில் இருசக்கர வாகனத்தில் மாட்டிறைச்சி ஏற்றிச்சென்றதாக கூறி, முஸ்லிம் இளைஞரை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாடுகள், காளைகள், ஒட்டகங்கள் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. அதைத்தொடர்ந்து, மாட்டிறைச்சி உண்பவர்கள், அதுகுறித்து பேசுபவர்கள் கொலை செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
“பசுவின் பெயரால் மனிதர்கள் கொலை செய்யப்படுவதை காந்தி கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்”, என பிரதமர் மோடி சமீபத்தில் தெரிவித்தும் ‘பசு பாதுகாவலர்கள்’ என்ற அமைப்பினர் ”பசுவை பாதுகாக்கிறோம்” என்ற பெயரில் கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்ட இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம் ஓரிரு தினங்களுக்கு முன்பு நீட்டித்தது. மேலும், மத்திய அரசின் உத்தரவுகளுக்கு நாடு முழுவதும் தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இருப்பினும், இம்மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மஹராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருசக்கர வாகனத்தில் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்றதாக சந்தேகத்தில் சலீம் இஸ்மாயில் ஷா என்ற இளைஞர் பசு பாதுகாவலர் கும்பலால் வியாழக்கிழமை தாக்கப்பட்டார்.
இதுகுறித்து காவல் துறையினர் விசாரித்ததில், தாக்கப்பட்ட இளைஞர் ஆட்டிறைச்சி விற்பனையாளர் என்பதும், அவர் தன் வாகனத்தில் ஆட்டிறைச்சியையே ஏற்றிச் சென்றதாகவும் தாக்கப்பட்ட இளைஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர் கொண்டு சென்ற இறைச்சி சோதனைக் கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது...